ஒருவன் தவமிருந்து ஒரு சிப்பியைப் பெற்றான்.
அந்தச் சிப்பி அவன் நினைத்த எதையும் உடனே தரும்.
அதன் மூலம் அவன் மிகுந்த மனநிறைவுடன் ஒரு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தான்.
ஒரு நாள் ஒரு சந்நியாசி அவன் வீட்டிற்கு வந்தார். அவன் அவரை அன்புடன் உபசரித்துப் பேசிக் கொண்டிருந்தபோது, அந்த சந்நியாசி ஒரு பெரிய சிப்பியைக் கையில் எடுத்தார். அந்தச் சிப்பு அவன் வைத்துக் கொண்டிருக்கும் சிப்பியைப் போலவே இருந்தது அவனை வியப்பில் ஆழ்த்தியது. ஆசையால் தூண்டப்பட்ட அவன் அந்தச் சந்நியாசியிடம் அவர் வைத்துக் கொண்டிருக்கும் சிப்பியைப் பற்றிக் கேட்டான். அதற்கு அவர் அந்த சிப்பி எதையும் உடனே இரண்டு மடங்காகத் தரும் எனச் சொன்னார்.
அவன் மேலும் ஆசையால் தூண்டப்பட்டு அந்தச் சிப்பியைத் தனக்குத் தருமாறு கேட்டான். அந்த சந்நியாசி ஒரு நிபந்தனையின் பேரில் அதைக் கொடுப்பதாக வாக்களித்தார். அது என்னெவென்றால் அவன் அவனுடைய சிப்பியை சந்நியாசியிடம் கொடுத்தால் அவர் அவருடைய சிப்பியை அவனுக்குக் கொடுப்பார். இந்த ஒப்பந்தம் அவனுக்குப் பிடித்துப் போனது. அவன் உடனே அவனுடைய சிப்பியை எடுத்துவந்து அவரிடம் கொடுத்துவிட்டு, அவரிடம் இருந்து அந்தப் பெரிய சிப்பியை வாங்கிக் கொண்டான்.
அன்று இரவே அந்தச் சிப்பியைச் சோதிக்க எண்ணி அவன் அந்தச் சிப்பியிடம் ஒரு மூட்டை தங்கம் கேட்டான். அதற்கு அந்தச் சிப்பி அவனிடம் ஏன் இரண்டு மூட்டைத் தங்கம் தருவேனே என்றது. அவன் அதனிடம் ஒரு அழகிய பெண்ணை வரவழைத்துத் தரும்படிக் கேட்டான். அதற்கு அந்தச் சிப்பி இரண்டு பெண்களாகத் தருவேனே என்றது. அவன் கேட்பதற்கெல்லாம் இவ்விதமே பதில் சொல்லியபடி இருந்தது அந்தச் சிப்பி.
அதிர்ச்சியில் ஆழ்ந்த அவன் வெளியே ஓடிவந்து சந்நியாசியைத் தேடினான். அவரை அங்கே காணவில்லை.