பயந்து கண்மூடினேன்
சூரிய ஒளிக்கு
கிழிந்த புகைப்படம்
மிதக்கும்
தங்க நீர்வீழ்ச்சியில்
அலையும் மேலெழும்பும்
காற்றுவெளியில்
கண் திறந்தேன்
மலையுச்சி விளிம்பில்
வாழ்வின் கனவுணர்ந்து.
ஏனென்றால்…
மே 29, 2007எனது குடுவையில் நிரம்பிய கவிதை வரிகள்
மே 27, 2007ஏற்கனவே சுவற்றில் எழுதிவைத்த
தெரிந்த மேற்கோள்கள் போல
நிலவொளியில் நான் தவறி விழுந்தேன்
ஃபிராய்டின் கனவுலக மொழிபெயர்ப்பு
நான் பேசும் கடந்தகால மொழிபெயர்ப்பு
என் கனவைப் பகிர்ந்து கொள்வேன்
என் கனவு என்பது விளங்கும்வரை
ஓசையில்லாமல் மகிழ்ச்சியை மட்டும் விவரிக்கும்
என் கனவை நிரூபிக்க என்னிடம் ஏதும் இல்லை
என் கனவு என்பது உன்னைத் தொடும்
நீ உன்னைத் தொடுவது போலவே
மறக்க முடியாதபடிக்கு
எண்ணங்களாகிய காடு
மே 25, 2007சில எண்ணங்கள் வலிமையுடையவையாகத் தோன்றுவது ஏன் ? அவைகளுக்கு உள்ள வலிமையினாலா ? அல்லது நான் அவற்றைத் தொடர்ந்து நினைப்பதால், கவனிப்பதால் அவை வலிமை பெறுகின்றனவா ?
எண்ணங்களின் பிடியிலிருந்து மனதை நீக்கி ஒரு நிலையில் வைக்க இக்கேள்வியால் ஏதேனும் பயன் உண்டா?
சிதறிப்போன வலிமையற்ற மனதில் தொடங்கி, ஒன்றோடு தொடர்பு கொள்ளுதல் என வாழ்க்கையில் எல்லா நிலைகளிலும் முடிவுறாத் தேவையாகத் தொடர்வது ஓர் அறுபடாத தொடர் உறவு.
தருணம்
மே 24, 2007எனது இத்தருணம்
என் விழிப்புணர்வால்
தழுவப்படட்டும்
அத்தழுவல்
சொற்களால் அல்ல
எனக்குக் கிடைக்கும்
உதவியாக
எனக்கு அளித்த பரிசு
எனது இத்தருணம்
கைகளால் பிடிக்கமுடியாத
வழுவழுப்பான
பட்டுத்துணி போல
என் கைவிட்டு
நழுவும்
எனது இத்தருணம்
என் நினைவில்
சிறகடித்துத்
துள்ளி மறையும்
எனது இத்தருணம்
எனது இத்தருணம்
என் சொற்களால்
தழுவப்படட்டும்
அத்தழுவல்
விழிப்புணர்வால் அல்ல
வாழ்க்கைப் பாடல்
மே 20, 2007எண்ணம் எழாத விழிப்பு நிலை அடையப்பட்டதா ?
மீண்டும் முளைக்காதபடி வாசனைகள் வறுக்கப்பட்டனவா ?
கர்ம-பலன் அடையாத சகஜ நிலை வந்து விட்டதா ?
மனிதப் பிறவியின் நோக்கம் நிறைவேறியதா ?
- ஸ்ரீ சாது ஓம் ( ரமண கீதம்)
மானம்
மே 19, 2007சேரமான் கணைக்கால் இரும்பொறை சோழன் கோச்செங்கணான் என்ற சோழ மன்னனிடம் போரில் சிறைப்பட்டு குடவாயில் என்னும் ஊரில் சிறை வைக்கப்பட்டான். சிறையில் அவனுக்குத் தண்ணீர் தாகம் எடுத்தது. தண்ணீர் கேட்டான். காவலன் சற்றே காலம் தாழ்த்தி தண்ணீர் கொண்டு வந்து தந்தான்.
கொண்டு வந்து தந்த தண்ணீரைக் குடிக்காமல் உயிர்விட்டான் அந்த மன்னன்.
மனம் பொறுக்காத மன்னன் இறக்கும்போது ஒரு பாடல் எழுதிவைத்துவிட்டு மாண்டான்.
அவன் எழுதிய பாடல்
“குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும்
ஆளன்று என்று வாளில் தப்பார்”
பொருள்:
குழந்தை இறந்து பிறந்தாலும், உருவம் இல்லாமல் சதைப் பிண்டமாக பிறந்தாலும் வாளால் கீறியே அதைப் புதைப்பார்கள். நான் போரில் சாகாமல், சிறையில் இருப்பதால் சிறைக்காவலன் கூட என்னை மதிக்கவில்லை என்பது சொல்லாத பொருள்.
ஆண்டவன் கட்டளை
மே 19, 2007ஆறு மனமே ஆறு
இந்த ஆண்டவன் கட்டளை ஆறு
சேர்ந்து மனிதன் வாழும் வகைக்குத் தெய்வத்தின் கட்டளை ஆறு
கட்டளைகள் 1 & 2.
கொடுக்கும் விலை
1. ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார்
கிடைக்கும் நிலை
உள்ளத்தில் உள்ளது அமைதி
உவமை
இதில் சொல்லுக்கு செய்கை பொன்னாகும்
கொடுக்கும் விலை
2. இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம்
கிடைக்கும் நிலை
இறைவன் வகுத்த நியதி
உவமை
வரும் துன்பத்தில் இன்பம் பட்டாகும்
நன்மை (கட்டளைகள் 1 & 2.)
இந்த இரண்டு கட்டளை அறிந்த மனதில் எல்லா நன்மையும் உண்டாகும்
கட்டளைகள் 3 & 4.
கொடுக்கும் விலை
3. உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால்
கிடைக்கும் நிலை
உலகம் உன்னிடம் மயங்கும்
உவமை
இதில் உண்மை என்பது அன்பாகும்
கொடுக்கும் விலை
4. நிலை உயரும் போது பணிவு கொண்டால்
கிடைக்கும் நிலை
உயிர்கள் உன்னை வணங்கும்
உவமை
பெரும் பணிவு என்பது பண்பாகும்
நன்மை (கட்டளைகள் 3 & 4.)
இந்த நான்கு கட்டளை அறிந்த மனதில் எல்லா நன்மையும் உண்டாகும்
கட்டளைகள் 5 & 6.
கொடுக்கும் விலை
5. ஆசை கோபம் களவு கொண்டவன்
கிடைக்கும் நிலை
பேசத் தெரிந்த மிருகம்
உவமை
இதில் மிருகம் என்பது கள்ள மனம்
கொடுக்கும் விலை
6. அன்பு நன்றி கருணை கொண்டவன்
கிடைக்கும் நிலை
மனித வடிவில் தெய்வம்
உவமை
உயர் தெய்வம் என்பது பிள்ளை மனம்
நன்மை (கட்டளைகள் 5 & 6.)
இந்த ஆறு கட்டளை அறிந்த மனது ஆண்டவன் வாழும் வெள்ளை மனம்
மறதி
மே 19, 2007மறதியால் இன்று அலைச்சல் ஏற்பட்டது.
என் மறதிக்கு எனக்குத் தெரிந்த காரணங்கள்.
1. அலட்சியம்
2. வேலைச் சுமை
3. கவலை
4. திட்டமிடாமை.
பாவேந்தர் பாரதிதாசனின் பாடல் ஒன்று வெளியூர் பயணம் செய்வோர் மனப்பாடம் செய்து கொண்டு பயனடைவதாக உள்ளது.
சீப்புக் கண்ணாடி ஆடை சிறுகத்தி கூந்தல் எண்ணெய்
சோப்பு பாட்டரி விளக்குத் தூக்கு கூஜா தாள் பென்சில்
தீப்பெட்டி கவிகை சால்வை செறுப்புக் கோவணம் படுக்கை
காப்பிட்டப் பெட்டி ரூபாய் கைகொள்க யாத்திரைக்கே
இன்று பயணம் செய்வோர் எடுத்துச் செல்லும் பொருள் இதில் எவ்வளவு என்பது பாத்தால் அவை மிகவும் குறைவாக, பலது இல்லாமல், வேறு பொருள்கள் அந்த இடத்தில் இடம் மாறியுள்ளது எனக்கு வியப்பு.
இன்று பயணம் செய்வோர் பயணிக்க ஈ-டிக்கெட் மற்றும் அதன் அத்தாட்சி, செல்போன் சார்ஜர், க்ரெடிட்/டெபிட் கார்டு என்று பல புதியதாக இன்று இடம் பெற்றுவிட்டன.
பாட்டரி விளக்கு, தூக்கு கூஜா, தாள் பென்சில் தீப்பெட்டி கோவணம் (?!) முதலியவை பயணத்துக்குத் தேவையா என்ன ?
பிறர்க்கு உதவுவது
மே 19, 2007வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு வகையான துன்பம்.
மகனை இழந்த பெரும் சோகம்.
பணத்தை இழந்த பெரும் துன்பம்.
மனைவியை இழந்து விட்ட துன்பம்.
கணவனை இழந்த துயரம்.
தாய் தந்தையை இழந்த அனாதையின் உள்ளம்.
பெரிய விபத்தில் எல்லோரையும் இழந்த பெண் ஒருவளின் துயரம்.
இன்னும் பல வாழ்க்கையில் இருந்தாலும் வாழ்க்கையை வாழ வேண்டிய யதார்த்தம்.
என்ன செய்வது? எப்படி வாழ்வது என்று சிந்திக்கும் போது துன்பப்பட்டவரின் உள்ளத்தில் தோன்றும் ஒளிக்கீற்று தான் “பிறர்க்கு உதவுவது”.
அதுவரை இந்த சொற்றொடரின் பொருள் யாருக்கும் விளங்காது.
வாழ்க்கையை அர்த்தம் நிறைந்ததாக மாற்றும் சக்தி இந்த செயலுக்கு மட்டுமே உண்டு.
வினா விடை
மே 19, 2007வினாவும் விடையும்.
கே.பி.சுந்தராம்பாளின் கணவர் எஸ்.ஜி.கிட்டப்பா (நடிகர் மற்றும் பாடகர்) ஒரு முறை நீதிமன்றத்தில் சாட்சி சொல்ல வேண்டிய நிலை. எதிர் வக்கீல் கிட்டப்பாவிடம் குறுக்கு விசாரணையில் கேட்ட கேள்விகளும், கிட்டப்பாவின் பதிலும்.
“நீங்க என்ன தொழில் செய்கிறீர்கள்?”
“நாடகங்களில் நடித்து வருகிறேன்”
“கூத்தாடும் கேவலமான பிழைப்பா?”
“ஆமாம். ஆனா எங்க அப்பா செஞ்ச தொழிலுக்கு இது தேவலை.”
அவர் என்ன செஞ்சார்?”
:வேணாம், அதச் சொல்ல முடியாது. அது கேவலத்திலும் கேவலமான தொழில்.
பரவாயில்ல. அது என்னனு சொல்லுங்க.
வக்கீல் தொழில் செஞ்சாரு.
***
பழைய மாணவர் ஒருவர் தம் ஆசிரியரைச் சந்தித்தார்.
மாணவர், ‘ஐயா, நான் உங்ககிட்டப் படிச்சிருக்கேன், எனக்குத் தமிழ் வாத்தியார் நீங்க தான்” என்றார்.
ஆசிரியர், ”ழ வராம அடிக்கடி என் கிட்ட உதை வாங்குவியே, அந்தப் பையன் தான் நீ?”
மாணவர், ‘ஆமாம், இப்ப நல்லா ழ வருது. நீங்க முந்தியெல்லாம் பசங்களக் கூப்பிட்டு வீட்டு வேலையெல்லாம் வாங்குவீங்களே, இப்பவும் அப்படித்தானா?”
*****=
அம்மா, படித்துக் கொண்டிருக்கும் மகனிடம் “டேய், கடைக்குபோய் வெண்டைக்காய், தக்காளி வாங்கிட்டுவாடா சமையலுக்கு”
அப்பா, ” என்ன ஐயேயெஸ்ஸுக்கா படிக்கிற? போய் வாங்கிட்டு வந்து படியேண்டா?”
மகன், ” நீங்க என்ன பேப்பர் படிச்சுட்டு சட்டசபையில போய் பதில் சொல்லவா போறிங்க?”
நாளை வரும் என்று நம்பலாமா ?
மே 19, 2007சுதா ரகுநாதன் பாடிய மானசப் பொய்கையிலே … என்ற தொகுப்பில் உள்ள நாளை வரும் என்று நம்பலாமா ?
என்ற பாடலைக் கேட்டவர்கள் யாராவது உண்டா ?. இப்பாடலைக் கேட்ட உடன் என் மனம் அடைந்த உணர்வுகளை வார்த்தையில் எழுத முடியாது என்று தோன்றினாலும், இது ஒரு பகிர முடியாத உன்னத அனுபவம் என்று மட்டும் என்னால் சொல்ல முடியும். பொதுவாகவே முருகன் பாடல்கள் என்பது மனதை உலுக்கி விடும் இயல்பாக அமைவது எனக்கு ஒரு வியப்பு. உதாரணமாக, பல பாடல்கள் என்னால் சொல்ல முடியும்.
என் அவதானிப்பு இப்படியாக
1. பாதிமதினதி – கே.ஜே .ஜேசுதாஸ் பாடியது – தரங்கிணி வெளியீடு (லைவ் கான்ஸர்ட் வால்யூம் -4)
2. பக்தியால் யான் உனைப் பல காலம் – கே.ஜே .ஜேசுதாஸ் பாடியது – தரங்கிணி வெளியீடு (லைவ் கான்ஸர்ட் வால்யூம் -4)
3. குறிஞ்சி நிலத் தெய்வம் முருகனே – கே.ஜே .ஜேசுதாஸ் பாடியது – தரங்கிணி வெளியீடு ( முருகன் பாடல்கள்)
இப்பாடல்கள் எழுதியவர், பாடியவர், ராகம், பின்ணணி இசை, ஒலிப்பதிவு என்று பல அம்சங்கள் சேர்ந்த ஒன்று.
கந்த சஷ்டிக் கவசம் பாடலின் உக்கிரகம் அதைக் கேட்டவர்களுக்கு நன்கு தெரியும். ( நான் கேட்டது சூலமங்கம் சகோதரிகள் பாடியது)
அதே வரிசையில் சண்முக கவசமும் நான் பல முறை (சஷ்டி கவசத்தை விட) திரும்பத் திரும்பக் கேட்கும் ஒரு ஒரு ஒலி வடிவம். ( சீர்காழி கோவிந்த ராஜன் பாடியது)
இப்படியாகச் சில பாடல்கள் மூலம் நான் முருகன் பாடல்கள் பற்றிய ஒரு அபிப்பிராயமும், விருப்பமும் கொண்டிருந்தேன்.
சுதா ரகுநாதன் பாடிய பாடலினை எழுத்து வடிவில் இங்கு பதிந்துள்ளேன். இப்பாடலில் வரும் “மனமுருகி” என்ற சொற்பிரயோகம் சுதா ரகுநாதனால் பல விதங்களில் ஏற்ற இறக்கத்துடன் பாடப்பட்டது கேட்பவர் மனம் உருகிவிடும் சக்தி படைத்தது.
நாளை வரும் என்று நம்பலாமா ? (2)
குகன் தாளைப் பணிந்தருள் பெற வேண்டாமா?
நாளை வரும் என்று நம்பலாமா ?
குகன் தாளைப் பணிந்தருள் பெற வேண்டாமா?
நாளை வரும் என்று நம்பலாமா ?
வேலைப் பிடித்தக் கந்தவேளை மனமுருகி(4)
காலை மாலை இரு வேளையும் துதிக்காமல்(2)
நாளை வரும் என்று நம்பலாமா ?
குகன் தாளைப் பணிந்தருள் பெற வேண்டாமா?
நாளை வரும் என்று நம்பலாமா ?
அழகான வாலிபம் அணங்குடனே தீரும் (2)
திரண்டுவரும் நேரம் கவலை பல சூழும் (2)
அழகான வாலிபம் அணங்குடனே தீரும்
திரண்டுவரும் நேரம் கவலை பல சூழும்
திருமுருகன் நாமம்
நாமம்
திருமுருகன் நாமம் நினைக்க நேரமில்லை (2)
மறுபிறவி என்பது எங்கோ தெரியவில்லை (2)
நாளை வரும் என்று நம்பலாமா ?
குகன் தாளைப் பணிந்தருள் பெற வேண்டாமா?
நாளை வரும் என்று நம்பலாமா ?
நம்பலாமா ? நம்பலாமா ?
இப்பாடல் தொகுப்பில் உள்ள மற்ற பாடல்களில் வேறு சில பாடல்களும் வார்த்தைகளால் விவரிக்க இயலாத தன்மையுடைய சிறப்புடையவை.
1. அபிராமி அந்தாதியின் தனம் தரும் கல்வி வரும் எனத் துவங்கும் ஒரு அம்மன் பாடல்
2. மானசப் பொய்கையிலே
3. நாதர் முடி மேல் இருக்கும் நாகப் பாம்பே
![]()
ராஜாக் கதை
மே 15, 2007இந்த ஞாயிறு எங்கள் பகுதி நகைச்சுவை மன்றத்திற்குப் போயிருந்தேன்.
வழக்க்ம் போல படித்த, பார்த்த மற்றும் கேட்ட ஜோக்குகளே உலா வந்து கொண்டிருந்தன. இதன் மத்தியில் ஒரு பெண் குழந்தை சுமார் 5 அல்லது 6 வயது தான் இருக்கும். மேடையேறி, ஜோக்கு சொல்ல ஆரம்பித்தாள்.
அவள் சொன்ன மொழியிலேயே இனி அந்த ஜோக்கு.
என் பெயர் பவித்ரா.
நான் உங்களுக்கு ஒரு ஜோக்கு இன்னைக்குச் சொல்லப் போறேன்.
(அமைதி சில வினாடிக்கு. அவள் முகத்தில் சிரிப்பு)
ஒரு நாள் மந்திரி ராஜாக்கிட்ட வந்து ….
(வாய் பொத்தி சிரிப்பு. மேலே பேச முடியவில்லை)
சில வினாடிக்குப் பிறகு,
ஒரு நாள் மந்திரி ராஜாக்கிட்ட வந்து ….
(மேலும் வாய்விட்டுச் சிரிப்பு. மேலே பேச முடியவில்லை)
அப்பெண் குழந்தையின் குதூகலம் மன்றத்தில் இருந்த எல்லோரையும் தொற்றிக் கொண்டு விட்டது. ஆளாளுக்குச் சிரிப்புடன், “சொல்லுமா, நாங்களும் கேட்டுச் சிரிப்போம்ல” என்று பேசத் துவங்கிவிட்டனர்.
அப்பெண்ணால் ஜோக்கு சொல்லவே முடியாத அளவிற்குச் சிரிப்பால் அவள் முகம் நிறைந்துவிட்டது.
மேலும், சில வினாடிகள் ஆசுவாசப்படுத்திக் கொண்டு, தீர்மானமான் முகத்துடன், ஆனால் சிரிப்பு கலையாமல் பேசச் துவங்கினாள்.
ஒரு நாள் மந்திரி ராஜாக்கிட்ட வந்து, “ராஜா, ராஜா, உங்களப் பார்க்கிறத்துக்கு ஒருத்தன் கிலோக் கணக்குல பேரிச்சம்பழம் வச்சிண்டு வாசல்ல நிக்கிறான்”. னு சொன்னார்.
அதுக்கு அந்த ராஜா, “மந்திரி, வாசல்ல போய் நாம கட்டி வச்சிருக்கிற ஆராய்ச்சி மணி இருக்கான்னு பார்த்துட்டு வா” அப்படின்னார்.
இந்த ஜோக்கு சொன்னதுக்குப் பிறகு மன்றத்தில் பரவிய சிரிப்பலை அடங்க வெகு நேரமாயிற்று.
எனக்கு இந்த ஜோக்கை விட அது சொல்லப்பட்ட விதம் மிகவும் கவர்ந்தது.
அப்பெண் குழந்தையைப் பாராட்டி, பேனா பரிசாகக் கொடுத்தாரர்கள்.
வீட்டுக்கு வந்து நான் திரும்பத் திரும்ப இந்த நிகழ்ச்சியையே யோசித்துக் கொண்டிருந்தேன்.
என் தாயார் என்னிடம் வந்து என்ன? வெளிய போய்ட்டுவந்து யோசனையா இருக்க ? என்று வினவினார்.
அவரிடம் இந்த ஜோக்கை அப்படியே நிகழ்ச்சி நடந்தபடிக்குச் சொன்னேன்.
அவருக்கு இந்த ஜோக்கு புரியவில்லை. இது எனக்கு வியப்பாக இருந்தது.
இது ஒரு சம்பவம். ஆனால் இதில் ஒரு நகைச்சுவை உள்ளது என்பது, மறைவாக உள்ளது.
என் தாயாருக்கு இரும்புக்குப் பேரீச்சம்பழம் தருவார்கள் என்பது தெரியும். இந்த நிகழ்ச்சியில் அதைச் சட்டென்று உடனே புரிந்து கொள்வதில் அவருக்கு இயலமுடியாமல் போயிற்று.
அவருடைய சிறு வயதில், அவரிடம் வந்து, இஸ்திரிக்கு என்று துணிகளை வாங்கிப் போனவன் திரும்ப வரவேயில்லை. பிறகு தான் தெரிந்தது, அவன் பிளாஸ்டிக் பொருள்களைப் பழைய துணிகளுக்கு விற்பவன் என்று.
இந்த நிகழ்ச்சி பல முறை எங்கள் வீட்டில் பேசப்பட்டதுண்டு. இதிலும் நகைச்சுவை உண்டு.
இதையே நகைச்சுவையாக, இஸ்திரிக்குக் துணி கேட்க வந்தவனிடம், “இதுக்கு என்ன கிடைக்கும், பக்கெட்டா, அல்லது டப்ப்ப்பா ஏதாவது தானா ? என்று கேட்டால், புரிந்து கொள்வது எப்படியோ அப்படியே தான் இந்த ஜோக்கும்.
உலகத்தில் உள்ள கதைகள் யாவும் மனதில் ஒளிந்துள்ளன.
மனம் விழிப்படைந்தால் தானாகவே, அக்கதைகள் வெளிவந்துவிடும்.
வாழ்க்கைச் சுவை
மே 13, 2007ஓர் ஊரில் ஒரு வீட்டில் ஒரு கூண்டுக் கிளிக்குத் தினமும் உண்ண மிளகு கொடுத்து வந்தார்கள். அந்தக் கூண்டுக்கிளி காரமான மிளகைச் சகித்தபடி உண்டு வந்தது. ஒரு நாள் ஒரு வழிப்போக்கன் அக்கிளி மிளகு உண்பதைக் கண்டு வருந்தி, அதற்கு ஒரு கருப்பு திராட்சையை உண்ணக் கொடுத்தான்.
கிளி அப்பழத்தின் சுவையில் மயங்கி, அவனிடம் ” இது என்ன பெரிய மிளகு, தித்திப்பாக இருக்கே?” என்று வினவியது.
அதற்கு அவன், இதைவிடத் தித்திப்பான ஒன்று உண்டு. அது உனக்கு நினைவில் இல்லை. இப்போது பார் அந்த தித்திப்பின் சுவையை என்று கூறியபடியே அக்கிளியின் கூண்டுக்கதவினைத் திறந்து அக்கிளியை வெளியே பறக்க விட்டான்.
போன மாதம் பொதிகையில் காட்டப்பட்ட ஆதிசங்கரர் திரைப்படத்தில் வந்த ஒரு காட்சி.
நாம இனிமே . . .
மே 13, 2007ஒரு நத்தை மெள்ள நடந்து வந்து கொண்டிருந்தது. அது வரும் பாதையில் ஒரு பெரிய காளான் குடை இருந்தது. அப்போது மழை பெய்ய ஆரம்பித்து விட்டது. நத்தை மழைக்கு அந்த காளான் குடைக்கு கீழே வந்து ஒதுங்கியது.
அதன் உடல் காளான் குடை மேல் உரசியது. மேலும், நத்தையின் எச்சில் காளான் குடை மேல் பட்டு விட்டது. காளான் குடை, மெல்லத் தன் தொண்டையை செருமியபடி, நத்தையே நீ உன் ஓட்டுக்குள்ளேயே ஒதுங்கியிருக்கலாமே, எனக்கு இடைஞ்சலாக இங்கே ஏன் ? எனக் கேட்டது.
நத்தை அதற்கு ஆமாம் இருக்கலாம் தான் என்று பதில் சொல்லிகொண்டிருக்கும் போதே இன்னொரு நத்தை அந்தப் பக்கமாக வந்தது, மேலும் அது பேசிக்கொண்டிருக்கும் இந்த நத்தையைப் பார்த்து விட்டு அதுவும் காளான் குடைக்குக் கீழே வந்து ஒதுங்கிக் கொண்டது. அப்போது இரண்டு நத்தைகளுக்கும் அந்த இடம் போதவில்லை. இரண்டும் ஒன்றை ஒன்று தள்ளியபடியே இருக்க, அப்போராட்டத்தில் காளான் குடை உடைந்து, சரிந்து கீழே விழுந்து விட்டது.
அப்போது ஒரு நத்தை இன்னொரு நத்தையிடம் சொன்னது, ” நாம இனிமே . . . “
இந்தக் கதை பிரேம்-ரமேஷ் எழுதிய பரதேசி என்ற நாவலிலிருந்து.
பசி – 4
மே 13, 2007பாரத்வாஜ முனிவரின் மகன் துரோணரின் மனைவிக்குத் தன் குழந்தையின் (அஸ்வத்தாமன் ?) பசியை அடைக்க வழி தெரியவில்லை. அப்பெண்மணி. அரிசி மாவை தண்ணீரில் கரைத்துப் பால் என்னும் தோற்றம் ஏற்படுத்தி குழந்தைக்குக் கொடுத்தாள்.
இக்கபடமான வாழ்க்கை துரோணருக்கு அதிர்ச்சியளித்தது. அவரிடம் பணம் சம்பாதிக்க எந்த திறமையும் அப்போது இல்லை. பிழைக்க வழி தெரியாமல் அவதிப்பட்ட அக்காலத்தில், பரசுராமர் (ரேணுகா மற்றும் ஜமதக்னி முனிவரின் மகன், திருமால் அவதாரம்) தானங்கள் செய்யும் நாள் என்று ஒரு நாள் உண்டு என்பது துரோணருக்குத் தெரியவந்தது.
அந்நாளில் துரோணர், பரசுராமரைத் தேடிச் சென்ற காலம், தானங்கள் எல்லாம் முடிந்து ஒன்றுமே இல்லாத காலம்.
பரசுராமர் அப்போது கொடுக்கத் தன்னிடம் பொருள் ஏதும் இல்லை என்று கைவிரித்து விட்டார்.
துரோணர் அதற்கு, ” சொர்க்க வாசலில் கதவு திறக்கும். உள்ளே போகலாம் என்று ஆயிரம் ஆண்டுகள் கண்விழித்தபடியே தவம் இருந்த ஒருவன், கடைசி நாள் அயர்ச்சியில் ஒரு விநாடி கண் மூடி திறந்த காலத்தில் கதவு திறந்து, பின் உடனே மூடிக்கொண்டால், அவனது மனநிலை எப்படி இருக்கும் ? அந்த மனநிலையில் நான் இப்போது இருக்கிறேன்.” என்றார்.
இந்த பதிலால் மனவெழுச்சி அடைந்த பரசுராமர், தன்னிடம் கொடுக்க தனது போர்த் திறமை மட்டுமே உண்டு எனவும், அதைத் துரோணருக்குத் தானமாகக் கற்பித்தார்.
அந்த தானத்தின் பயனால் துரோணர் அடைந்த பதவி தான் மகாபாரதத்தில் குரு பதவி.
அப்பதவியில், அவர் மரணம், அஸ்வத்தாமன் இறந்தான் என்ற கபடமான நிகழ்ச்சியால்.
தன் மகனின் பசி மற்றும் கபட வாழ்க்கை
இவற்றிலிருந்து வெளிவந்த துரோணரின் மரணம்
தன் மகனின் மரணம் என்ற ஒரு கபட நிகழ்ச்சியால்.
உன்னை விழுங்கும் பரவசநிலை
மே 13, 2007என்ன தெரியும் அவளுக்கு ?
என நான் ஒதுங்கிய காலத்தில்
தருக்க நியாயத்தை பொய்யாக்கி
நீ சொன்ன ஒன்றை
நான் உனக்கு நினைவுகூறும்போது
பரவசநிலை உன்னை விழுங்கட்டும்.
நாம் வாழ்வில்
நெருங்காத காலத்தில்
முகமறியா ஞாநி போல
என் கண்ணீரைத் துடைத்தபடி
நீ சொன்ன ஒன்றை
நான் உனக்கு நினைவுகூறும்போது
பரவசநிலை உன்னை விழுங்கட்டும்.
அமைதியும் இரவும்
கலந்த குளிரில்
புரியாத முகபாவத்தில்
நீ சொன்ன ஒன்றை
நான் உனக்கு நினைவுகூறும்போது
பரவசநிலை உன்னை விழுங்கட்டும்
என் முகம்பார்த்து கரங்களைப் பற்றி
மழைச்சாரல்
என் முகத்தில் வீசியதுபோல
நீ சொன்ன ஒன்றை
நான் உனக்கு நினைவுகூறும் போது
பரவசநிலை உன்னை விழுங்கட்டும்
லேசான புகையும்,
அடர்ந்த நறுமணமும்
சூழ்ந்த இரவில்
நீ சொன்ன ஒன்றை
நான் உனக்கு நினைவுகூறும் போது
பரவசநிலை உன்னை விழுங்கட்டும்.
வாயோரத்தில் ஒட்டிய
புன்னைகையுடன்
உறக்க மயக்கத்தில்
நீ சொன்ன ஒன்றை
நான் உனக்கு நினைவுகூறும் போது
பரவசநிலை உன்னை விழுங்கட்டும்.
ரகசியம்
மே 13, 2007காற்றின் மூச்சு எங்கள் மீது படர்ந்து பரவிய
ஏரியில் சூரியஸ்தமனம் கசிந்து பரவிய
வண்ணத்துப் பூச்சிகள் சிறகடித்துப் பறந்து பரவிய
இக்காலம் மறைவிடங்களின் உச்சகட்டம்
பனியின் அடர்த்தியில் நிழலுருவங்கள் மறைந்து பரவிய
சோம்பேறித் தவளைகள் தாவி குதிக்கும் நீரலைகள் பரவிய
மந்தமான இலையுதிகாலச் சிறகுகள் அலைந்து பரவிய
இக்காலம் மறைவிடங்களின் உச்சகட்டம்
திடீரெனெ எனைத் தேடும் பால்யகால நினைவுகள் பரவிய
என் இதயத்தில் பெருக்கெடுக்கும் கனவுகள் பரவிய
ஆணாக இருப்பதின் களைப்பு பரவிய
இக்காலம் மறைவிடங்களின் உச்சகட்டம்
அவள் தன் காயங்களை வெற்றியின் அடையாளங்களாக
என்னிடம் காட்டும் இக்காலம் இனிமையானது
இது வார்த்தைகளிலேயே சிறந்த மொழிபெயர்ப்பு
பசி – 3
மே 12, 2007என்னுடன் படித்தவர்கள் நல்ல நிலைமையில் உள்ளனர். அவர்களையேப் பார்த்துப் பழகிய நான் சென்ற வாரம் ஒரு திருமணத்தில் காய் நறுக்கும் கோலத்தில் என் பள்ளி நண்பன் வாசுவைப் பார்த்து திகைத்தேன்.
முதலில் அவன் தானோ என்று சந்தேகம், பின்பு அவன் அடுத்தரிடம் பேசும் தோரணை அவனை எனக்கு அடையாளம் காட்டியது.
மிமிக்ரி செய்வதில் தேர்ந்தவன். அவன் பேசத் துவங்கினாலே எங்கள் நட்பு வட்டம் சிரிப்பில் மிதக்கும். அவன் குரல், உல்லாசம் நிறைந்த அந்தக் கால வாழ்க்கையை ஒரு கணம் என் நினைவில் மின்னலடித்தது.
எனது வழுக்கைத் தலை அவனுக்கு என்னை அடையாளம் காண சிரமம் இருந்தது. நானாகச் சென்று என்னை அறிமுகப்படுத்திய பின் அவன் முகத்தில் என்னை நினைவுக் கொண்டுவந்த மகிழ்ச்சி உடனே தெரிந்தது. ராமா, நீயாடா? என்று கத்திக் கையோடு என்னைக் கட்டியணைத்தான்.
பெருங்களத்தூர் ஸ்டாண்டர்ஸ் மோட்டார்ஸ் தொழிற்சாலையில் ஒரு தொழிலாளியாகப் பணிபுரிய வேண்டும் என்பது அவனின் அந்தக் காலக் கனவு மற்றும் இலட்சியம். இன்று அவனின் கனவும் நிஜம் இல்லை, அந்தத் தொழிற்சாலையும் இல்லை. பரஸ்பர விசாரிப்புக்குப் பின் அவனது இந்த வாழ்க்கைப் பற்றிப் பேச்சு திரும்பியது.
அவன் எல்லாவிதச் சமையலும் செய்வதில் தேர்ந்தவனாம். அவனுக்குத் தெரியாத சைவச் சமையல் வகை இன்றுவரை கிடையாதாம்.
அவன் சொன்னான், “ஒவ்வொரு மனிதனுக்கும் நினைவு எப்படி அவசியமோ, அப்படியே புனைவும் அவசியம்”. வாழ்க்கையில் உள்ள வினோதத்தையும், யதார்த்தமற்றப் போக்கையும் எதிர்கொள்ள இது மிகவும் அவசியம்”.
என்னால் விதவிதமான பல விலையுயர்ந்த உணவு வகைகளைச் சமைக்க முடியும். எனக்கும் அந்த உணவிற்கும் உள்ள இடைவெளி மிகவும் அதிகம். பல வித விலையுயர்ந்த உணவு என்னால் சமைக்கப்பட்டு பலருக்குப் பரிமாரப்படும்போது எனது ஆத்மா ஒரு நிறைவு அடைகிறது. நான் அந்தப் பசியையும், உணவையும் சேர்த்துக் கற்பனையில் அந்தக் கலப்பு நிகழ்ச்சியை என்னை வைத்து எண்ணி மனநிறைவடைகிறேன்.
எனது தின வாழ்க்கையில் நான் உண்ணும் உணவு வேறு வகை. பசி என்பதை அனுபவித்துப் பார்த்தவன் நான். அப்பசியை அடக்க நான் செய்த பரிசோதனை முயற்சிகள் பல. அதில் ஒன்று என்னால் மறக்க முடியாதது. “பசி என்பதை அடக்க வினோதமான சில பழக்க வழக்கங்கள் பசித்தவர்கள் இடையே உள்ளன. அதில் ஒன்று சிகரெட் அல்லது சுருட்டுச் சாம்லை நீரில் நனைத்து நக்கிச் சுவைப்பது. எனக்குச் சிகரெட் பிடிப்பதில் விருப்பமில்லாவிட்டாலும், அதன் சாம்பல் தரும் சுவைக்கு ஈடாக வேறு ருசியும், போதையும் வேறெவற்றிலுமில்லை.”
நான் செய்வது யாருக்கும் தீங்கில்லை.
ஆனால் என் செயலில் எனக்கு உறுத்தலில்லை.
இது நான் உருவாக்கிய வலி நீக்கும் மருந்து.
நான் எனக்குள் சொல்லிக் கொண்டேன்.
“நாய்கள் அமைதியாகப் பசியின்றி
வாழ்ந்து சாகும் உலகத்தில் தான்
இறைவன் இருப்பாராம்.”
என் நண்பன் போன்றவர் பசியின்றி
வாழ்ந்து சாகும் உலகத்தில்
யார் இருப்பார்கள் ?”
எனக்குத் திருமூலர் பாடல் நினைவுக்கு வருகிறது.
“அன்புள் உருகு அழுவான் அரற்றுவன்
என்பும் உருக இராப்பகல் ஏத்துவன்
என்பொன் மணியை இறைவனை யீசனைத்
தின்பன் கடிப்பன் திருத்துவன் தானே”
பசி – 2
மே 12, 2007எனது எதிர் வீட்டுக் காம்பவுண்ட் சுவர் வழியாக ஒரு எச்சில் இலை கொஞ்சம் உணவுடன் சாலையில் வந்து விழும் ஒலி கேட்டு இன்று மூன்று ஜீவன்கள் திரும்பிப் பார்த்தன. அந்த மூன்று ஜீவன்களில் நானும் ஒருவன். மற்ற இரண்டு ஜீவன்கள் ஒரு ஆடும், நாயும்.
இரண்டும் ஆர்வத்துடன் இலையை நோக்கி ஓடி வந்தன. நாய் மிகுந்த தன்னம்பிக்கையுடனும், அதிகாரத்துடனும், அந்த இலையை நெருங்கி முகர்ந்து பார்த்து பின் நக்கிச் சாப்பிடத் துவங்கியது.
ஆட்டிற்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அது ஒரு முறை குரலெழுப்பித் தன் இருப்பைத் தெரிவித்தது, பதிலுக்கு நாய் கடுமையாக முகம் திருப்பிக் வள் என்று குலைத்தது.
ஆட்டினால் இலை வேண்டம் என்று நகர்ந்து போகவும் முடியவில்லை. அங்கேயே காத்திருக்கவும் முடியவில்லை. அந்த இலையை மீட்கவும் தெரியவில்லை.
நாய் ஆடு வந்து இலையை பறித்துவிடாமல் இருக்க சற்று அவசரத்துடன் இலையை இப்போது நக்கத் துவங்கியது.
ஆட்டிற்கு உணவு இலை. நாய்க்கு உணவு அந்த இலையில் உள்ள மிச்சம் மீதி மட்டுமே. அதால் இலையை உண்ண முடியாது.
இரண்டிற்கும் பொதுவான ஒரு அம்சம் பசி !
பசி – 1
மே 11, 2007திடீரென்று என் மனதில் சில வாக்கியங்கள் உருவாயின. அவை அற்புதமானவையாக எனக்குப் பட்டது. இதற்கு முன் இவ்வளவு அற்புதமான வாக்கியங்கள் என்னால் சிந்திக்கப்பட்டு உருவானதில்லை என்ற உண்மையும் எனக்குப் புரிந்தது.
அந்த வாக்கியங்களை நான் திரும்ப ஒரு முறை சொல்லிப்பார்த்தேன்.
அப்போது வேறு சில வாக்கியங்களும் என் சொல்லுதலுடன்
தாமகவே வந்து சேர்ந்துவிடும் அழகு அல்லது கொடுமை நிகழ்ந்தது.
எனது கணிணியில் அவற்றைத் தட்டச்சு செய்யும் எண்ணத்தில் எழுத அமர்ந்தேன். வேகமான ஒரு ஆறு போல வார்த்தைக்குப் பின் வார்த்தை, அதன் தொடர்ச்சியாக வாக்கியம் என அவை வளர்ந்து மொத்தமாக ஒரு பொருளை உருவாக்கி விட்டன.
சக்தி என்பதின் பொருள் விளங்குவது போல இருந்தது.
இந்த எழுதுகிற வேகம் பல நிமிடங்கள் நீடிக்கிறது. சம்பவங்களும், பேச்சுக்களும் என் மூளையில் பொங்கி வழிந்தபடி உள்ளது. இந்த ஆனந்தத்தில் திளைப்பது எவ்வளவு சுகமானது ? இச்சுகத்தை எதனுடன் ஒப்பிட முடியும் ? நான் அந்த ஆனந்ததிற்குக் கட்டுப்படுவது சில நிமிடங்களே. இவையே நினைத்தபொதெல்லாம் என்னால் அனுபவிக்க முடியும் என்று என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.
சிந்தனையின் வேகத்தில் எழுதிச் சமாளிக்க முடியாமல் பல விஷயங்களை நான் விட்டுவிடுவது என் மனத்துயரை அதிகரித்துவிடுகிறது. என்னால் முடிந்த அளவு வேகமாகவும், நினைவுக் கூட்டியும் எழுதுகிறேன். அப்படியும் விடுபட்ட விஷயங்கள் பல என்னை ஏக்கமுறச் செய்கிறது.
நான் எழுதியதிலும், வாசித்ததிலும் கூட இது தான் சிறந்தது என்று ஏனோ ஒரு எண்ணம் எனக்குக் தோன்றுகிறது.
தருணம்
மே 3, 2007அவளின் கனவு
ஒரு வியாபாரச் சந்திப்பு
என்னுடன்
விலங்குப் பண்ணையில்
பண்ணையில்
ஒரு நாள் மதியம்
அது நிகழ்ந்தது
அவளின் முழு நினைவுச் சக்தியில்
சக்தி என்பது
நினைவில் மட்டுமல்ல
தோற்றத்திலும்
என்பது
என்னால் அங்கு நிறுவப்பட்டது
நிறுவப்பட்ட விவாதம்
ஒளிர்ந்தது
இருவரின் நிராசையில்
நிராசையின் வேகத்தில்
நான் சந்தித்தது
அவளின் புன்னகை
புன்னகை என்பது காதலின்
அடையாளம் அதுவும்
அவளருந்தும் தண்ணீரில்
நான் கண்ட பிரதிபலிப்பு.
Hello world!
மே 3, 2007Welcome to ஈ – வேகம். This is my first post. Please leave your comments if my blog brovoked anything inside you!
RAM பதிப்பித்தது.
RAM பதிப்பித்தது.
RAM பதிப்பித்தது.