ஓஷோவின் தியானநிலைத் தருணங்கள்

ஏப்ரல் 13, 2009


ஜமுனா கினாரே

ஏப்ரல் 13, 2009

பாலமுரளிகிருஷ்ணாவின் குரலில் சுவாதி் திருநாள் மகாராஜாவின் இந்தப் பாடலைக் கேட்டதுண்டா ? 87-88 -ல் எம்.பி.ஸ்ரீநிவாசன் இசையமைப்பில் வெளிவந்து தேசீய விருது பெற்ற திரைப்படத்திலும் (சுவாதி் திருநாள்)இப்பாடல் உண்டு.


கோதும்பி நடனம்

ஏப்ரல் 7, 2009

இளையராஜாவின் ‘திருவாசகம்’ இசை தொகுப்பில் வரும் ‘பூவேறு கோனும்’ திருவாசக பாடலின் இசை வடிவம் பலமுறை நான் கேட்டு ரசித்த ஒன்று. ஆனால், அதன் காட்சியமைப்பு எப்படி இருக்கும் என நான் யோசித்தது உண்டு. அதற்கு விடையாக ஒரு நடனக் காட்சியை கண்டு மகிழ்ந்து போனேன். அதன் இணைப்பு இங்கே



இரண்டு வார்த்தைகள்

ஏப்ரல் 7, 2009

குரு மட்டும் சீடர்களுடன் பேச அனுமதி உண்டு.
சீடர்கள் பேச அவர்களுக்கு ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே அனுமதி. அதுவும் இரண்டு வார்த்தைகள் மட்டுமே பேச அனுமதி கிடைக்கும்

முதல் ஆண்டில் ஒரு சீடன் பேசினான், ” படுக்கை கடினம் “

இரண்டாம் ஆண்டில் அவனே பேசினான், ” சாப்பாடு நாற்றம் “

மூன்றாம் ஆண்டு மறுபடியும் அவனே பேசினான், ” நான் வெளியேறுகிறேன் “

குரு அவனை நோக்கி புன்னகைத்தார்.


அழகு குட்டி செல்லம்

ஏப்ரல் 1, 2009

உனக்குத் தெரிந்த மொழியிலே எனக்குப் பேச தெரியலே
எனக்குத் தெரிந்த பாஷை பேச உனக்குத் தெரியவில்லை
இருந்தும் நமக்குள் இது என்ன புது பேச்சு ?


தாயே ! யசோதா !!

மார்ச் 26, 2009


தத்துவங்களைப் பேசுவது

மார்ச் 24, 2009

சரியான செயலை ஒவ்வொரு முறையும் நம்மால் செய்ய முடிகிறதா ?

இந்தக் கேள்வியில் இரு சொற்கள் “பொது” வானவை.

1. சரியான செயல், 2. செய்வது.

இந்த இரு சொற்களையும் அதன் பொருளையும் விளங்கிக் கொள்ள ஒரு காட்சித் தொகுப்பு இங்கே இணைக்கப்பட்டுள்ளது.

 .

இந்தத் தொகுப்பினை வடிவமைத்தவருக்கு என் நன்றி.


நான் கடவுள் – உலகப் பார்வையில்

மார்ச் 20, 2009

நல்ல படம் , கெட்ட படம் என்ற விமர்சனங்களுக்கு மீறிய புதிய விமர்சனமாக ஆபத்தான படம் என்ற ஒரு விமர்சனத்தைப் படித்தபோது, இந்தப் படத்தைப் பார்க்க விரும்பினேன். பார்த்த பின்புதான் இந்தப் படத்தை உள்வாங்கிக் கொள்வது, சராசரி தமிழ் சினிமா பார்த்துப் பழகினவர்களுக்குச் சிரமமான ஒன்று என புரிந்தது. இந்த படம் ஏற்படுத்தும் அதிர்ச்சி அலைகள் அழகானவை.

· ஒருவரின் மரணத்திற்கு இறுதிமரியாதை செய்யப் போகும்போது சீனர்கள் வெள்ளையுடை அணிவர். அமெரிக்கர்கள் கறுப்பு உடை.

· இங்கிலாந்திலும், அமெரிக்காவிலும் கைக்கடிகாரம் “ஓடுகிறது” என்பார்கள், ஸ்பானிஷில் “நடக்கிறது” என்பர், அதுவே ஜெர்மனியில், ”இயங்குகிறது” என்பார்கள்.

· மின் விளக்குகளை ஆஸ்திரேலியாவில் ஆன் செய்வதற்கு சுவிட்சைக் “கீழே” தள்ளுவார்கள், வட அமெரிக்காவில் மேலே” தள்ளுவார்கள்.

· ஆஸ்திரேலிய, இங்கிலாந்து மற்றும் ஜப்பானிய வாகனங்கள் அந்த ஊர்களில் சாலைகளில் “இடப்புறம்” ஓடும்போது, அமெரிக்காவில் “வலப்புறம்” ஓடும்.

· அமெரிக்காவில் மக்கள் உலவும் பொது இடங்களில் முத்தம் கொடுக்க அனுமதி உண்டு. சீனாவில் அப்படி கிடையாது.

அந்த வகையில் நீரோட்டத்தின் போக்கில் மிதந்து போகும் மரத்தண்டு நீருக்கு வெளியே அதிகம் தெரியாது. அதனைத் தவறாகப் புரிந்துகொள்ளவும் வாய்ப்பு அதிகம்.அது போல,முரண்பாடுகள் பற்றிய விதி, மாறுதலுக்கான அடைப்படை ஆகிய இரண்டும் இப்படத்தின் அடிநாதமாக விளங்குகிறது. எதிர்மறைகளின் ஒற்றுமையும், போராட்டமும் எவ்வாறு செயல்படுகின்றன ? எதிர்மறைகளின் ஒற்றுமையில் – இரண்டும் வெவ்வேறாயினும் ஒன்றின் பாதிப்பு மற்றொன்றின் மீது செல்கிறது.ஆதரவற்றவர்கள், விளிம்பு நிலை மனிதர்கள் இவர்களைப் பற்றி பேசுபவர்கள் “பொது” வைப் புறக்கணிக்காமல் எப்படிப் பேச முடியும் என்று இப்படம் சொல்லித் தருகிறது.

சமூக இருப்பு சமூக உணர்வைத் தீர்மானிக்கிறது. அந்த வகையில் தத்துவ போராட்டமாக நான் கடவுள், கடவுளையும் அதன் தத்துவத்தையும் முன் வைத்து விவாதிக்கின்றது.இப்படத்தின் தத்துவ அடையாளமாக “அக நிலைக் கருத்து முதல்வாதம்” பேசப்படுகிறது. ஆனால், படம் நெடுக புறநிலைக் கருத்து முதல்வாதம்” விரிவாக பேசப்படுகிறது. இதனைத் “தனிமனித மன உணர்வு, சமுதாய மன உணர்வு” என்ற இரு தளங்களில் காண முடியும்.

உத்தரபிரதேசத்தில் காட்டில் மரம் வெட்டச் சென்ற தம்பதியர், தன் குழந்தையை ஒரு மரத்தினடியில் விட்டுவிட்டு, தம் வேலைக்குச் சென்றனர். அங்கு வந்த ஒரு கரடிக் கூட்டம் அக்குழந்தையைத் தூக்கிச் சென்றுவிட்டது.பல ஆண்டுகளுக்குப் பின் அக்க்குழந்தை மீட்கப்பட்டது. அது மனித இயல்புகளை இழந்து கரடி போலவே நடந்து கொண்டது. இந்த உதாரணச் சம்பவம் சுட்டிக் காட்டுவது என்ன ? மனிதனுடைய பிரதிபலிப்பு முதலில் புலனுணர்வு, மொழி வடிவம், சிந்தனை, கருத்து, அனுமானம் இறுதியாக தீர்ப்பு என உயர்வடிவங்களை எட்டும் என்பதாகும். குழந்தை ஒன்றும் அறியாத நிலையில் இருந்து நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டு வளர்ந்த ஒரு முழு மனிதனாக மாறுவதை “சமூகமயமாதல்” எனலாம். இந்த வகையில் தனி மனிதர்களுக்குத் தேவையான பயிற்சி அளிக்க குடும்பம், நண்பர்கள், பள்ளி, அரசு மற்றும் மதம் போன்ற செயலிகள் மிக முக்கியமானவை. மதக் கோட்பாடுகளையும், மதப் பணிகளையும் குழந்தையிலிருந்து உள்வாங்கிய “அகோரி” யை அந்த வகையில் இப்படம் அறிமுகப்படுத்தும்போது நாம் அந்தத் “தனி நபரை” புரிந்து கொள்ள முடியும்.

இயற்கை விதிகளை யார் அனுசரிக்கிறார்களோ அவர்கள் நீடித்திருக்கிறார்கள். அனுசரிக்கத் தவறியவர்கள் கொல்லப்படுகின்றார்கள். இந்த நியதியை சர்வைவல் ஆப் தெ பிட்டஸ்ட்(Survival of the fittest) என்று அறிவியல் அறிஞர்கள் கூறுகிறார்கள். லாயட் மூர்கான் என்ற அறிஞர்,

நாகரீகம் வளர வளர மனிதனின் இயற்கையை கட்டுப்படுத்துகின்ற விதம் அதிகரிக்கும்.” என்று சொல்கிறார்.

இந்த நியதியின்படி சமூகத்தில் பலம் நிறைந்த சிறந்த மனிதர்கள் நிறைந்து இருப்பதோடு மட்டுமல்லாமல் குறைபாடுள்ள மனிதர்கள் வெளியேற்றப்படுகிறார்கள். இதனால் சமூகம் எல்லா நிலைகளிலும் முன்னேற்றம் அடைகிறது. இந்த இயற்கையான விதியை ஒருவன் கையிலெடுக்கும்போது என்னாகும் ? என்ற கேள்விக்கான விடையை இப்படம் தருகிறது.

வானில் ஒரு குறிப்பிட்ட நட்கத்திரத்தைக் காண்பதற்கு படிப்படியான வழியைக் கையாள்கிறோம். முதலில் ஒரு மரம், மரத்தின் கிளை, கிளை வழியே தெரிகின்ற பிரகாசமான நட்சத்திரம் என்று படிப்படியாகக் காணும்போது விரைவில் அந்தக் குறிப்பிட்ட நட்சத்திரத்தைக் காண முடிகிறது. அதுபோலவே எங்கும் நிறைந்திருக்கும் இறைவனைச் சட்டென்று அகத்தில் காண வேண்டும் என்றால் அது அவ்வளவு சுலபம் அல்ல. ஆல்பர்ட் ஐன்ஸ்ட்டீனுடைய “என்னுடைய பார்வையில் உலகம் (The World I See it)” என்ற புத்தகத்தில் சொன்ன ஒரு விளக்கம் எனக்கு இப்படம் பார்த்தபோது நினைவுக்கு வந்தது. அந்த விளக்கம் உயிரினங்களை ஆதரிப்பதும், தண்டிப்பதும் நாம் புரிந்துணரும் ஓர் இச்சா சக்தியுடன் கூடியதுமான ஒரு தெய்வத்தை உருவகப்படுத்த என்னால் முடியாது என்று இருக்கும். இந்தப் படத்தைப் பார்த்தால் அவருக்கு ஒரு தெய்வத்தை உருவகப்படுத்த முடிந்திருக்கும்.

உபநிடதங்களிலும், மகாபாரதத்திலும், குறிப்பாக கீதையிலும், வேதங்களிலும், புராணங்களிலும் பிரதானமாகக் காணப்படும் ஒரு பாவனை தான் சரீர ரதத்தில் பயணம் செய்யும் ஆன்மாவின் ஓவியம். இந்த ஓவியத்தைக் கண்டவர்களுக்கு “நான் கடவுள்” என்பது ஆன்மீக அருள் பொங்கும் சாகசக் கதை அது என்பது புரியும்.மகாபாரதம், தர்மம் மற்றும் அதர்மத்தை விளக்கும் ஒரு பழங்கதை. இன்றைய காலத்தில் தர்மம் மற்றும் அதர்மத்தை மீண்டும் பேசி,மறுபரிசீலனை செய்ய ஒரு புதிய கதையாக நான் கடவுள் ஒரு விவாத மேடையை அமைத்துக் கொடுத்துள்ளது.

நான் கடவுள் என்று சொற்களால் கூறுவது பிரயோகிக்கத் தக்கதாக இல்லாததாயிருக்கும் இடங்கள் இப்படத்தில் அநேகம். “அச்சமின்மையே பிரம்மம்” என்ற மஹாவாக்யத்திற்கு இணையான வசனமாக “நான் கடவுள்” இருக்கிறது. அஹம் ப்ரஹ்மாஸ்மி என்பது யாரும் யாரிடமும் பிரகடனப்படுத்துவதல்ல. அது ஒரு சுயப் பிரகாசம்.அது மிகவும் செறிவான ஒரு மெளனம். அதிக உயர்வான ஒரு வசனம் அது.

தாண்டவன் அண்டு கோ (?!) நிறுவனத்தின் முதலாளி, அவரின் மேனேஜர் முருகன், முருகனின் உதவியாளர் (திருநங்கை)மற்றும் முருகனின் குழு அங்கத்தினர்களான பணியாளர்கள் (ஆதரவற்ற ஊனமுற்றோர்கள்) என்று ஒரு நிர்வாக அமைப்பு இப்படத்தில் காட்டப்பட்டுள்ளது. ஒரு எம்பியே (MBA) பட்டபடிப்பு படித்தவர்களால் கையாளப்படும் நிர்வாகவியல் நுணுக்கங்கள் இவர்கள் அனைவரும் வந்து போகும் காட்சிகளில் நிறைந்துள்ளன.

Characteristics of Leadership எனப்படும் தலைமைப் பண்புக்கான இயல்புகள் மற்றும் தேவைகள் காட்சியமைப்பில் அழகாக வெளிவந்துள்ளது.

1.Co-existence with fellowship

தலைமைப் பண்பு என்பது முடிசூட்டுவதால் வருவதல்ல. கேட்டும் கொடுப்பதல்ல. காட்டுக்கு ராஜாவானாலும் சிங்கத்தின் வாயில் இரை வந்து விழாது. அதே போல தலைமைப் பண்பு மிக்கவராக ஒருவர் இருந்தாலும், அவரது கீழ் உள்ள அங்கத்தினர்களிடமிருந்து மதிப்பு, மரியாதை, விசுவாசம் என்பது அதிகாரத்தின் மூலமே வரவழைத்துக் கொள்ள முடியும்.(தாண்டவன் சம்பந்தப்பட்ட காட்சிகள்)

2.Responsibility

மொத்த குழு நடவடிக்கைக்கும் தலைவரே பொறுப்பு.

(முருகன் சம்பந்தப்பட்ட காட்சிகள்)

3.Understanding Nature

மொத்த குழு அங்கத்தினர்களின் மனநிலையையும், தேவையையும், பிரச்சினைகளையும் முக்கியமாக உணர்வுகளையும் தலைவர் புரிந்துவைத்திருக்க வேண்டும்.(முருகன் சம்பந்தப்பட்ட காட்சிகள்)

4.Precedence

தலைவர் தன் குழு அங்கத்தினர்களை தனது நடவடிக்கைகள் மூலம் ஒரு முன்னுதாரணமாகத் திகழ கவர வேண்டும். ( ஒரு ஊனமுற்ற சிறுவன் தானும் முதலாளியாக வேண்டும் என்று பேசும் நையாண்டிக் காட்சி)

5.Situation

சூழ்நிலைக்குத் தக்கவாறு தன் செயல்முறைகளை மாற்றிக் கொள்வது (கேரள வியாபாரி வரும் காட்சிகள்)

அடுத்ததாக, Functions of Leadership எனப்படும் தலைமைப் பண்புக்கான பகுதிகள் தாண்டவன், முருகனிடம் துல்லியமாக இருப்பது அழகாகப் படம் பிடிக்கப்பட்டுள்ளது.

1.Motivate and Guide

முருகன் குடித்துவிட்டு வந்து புலம்பும் காட்சியும் அம்மாவும் நீயே அப்பாவும் நீயே பாடல் காட்சியும்

2.Assists social system

அதிகமான பிச்சைக்காசு கலெக்ஷன் குறைந்த எண்ணிக்கையில் ஆதரவற்ற ஊனமுற்றோர்கள் வைத்து என வரும் விவாதக் காட்சி

3.Enlists co-operation

அம்சவல்லியை முருகனும், திருநங்கையும் காப்பாற்ற முனையும் காட்சி

4.Performance

கடவுள் வேஷமிட்டு வரும் ஆதரவற்ற ஊனமுற்றோர்கள் காட்சிகள்

முக்கியமாக, REDDINS THREE DIMENSIONAL MODEL OF LEDERSHIP இப்படத்தில் முழுமையாகக் கையாளப்பட்டுள்ளது எனக்கு வியப்பு. Ineffective styles, Basic Styles and Effective styles என மூன்று வடிவங்களும் இப்படத்தில் உண்டு.

சொல் மெளனத்தை நோக்கித் திரும்பாத போது கானத்தை நோக்கித் திரும்புகிறது. பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன் பாடல் அந்த ரகம்.

வரலாற்றில் தனி நபர் வகிக்கும் பங்கு” என்ற நூலில், ரஷ்ய மார்க்ஸீய அறிஞர் பிளக்கனோவ், ” உயரிய மனிதன் தொடங்கி வைப்பவனாகவே விளங்குகிறான். ஏனெனில், அவன் மற்றவர்களை விட அதிக தொலைநோக்கு உள்ளவாரக இருக்கிறான். மற்றவர்களை விட அதிக தீவிரமாக விழைந்து செயல்படுகிறான். சமூக அறிவு வளர்ச்சி முன்பே ஒரு கட்டத்தை எட்டியுள்ளபோது, அதன் தொடர்ச்சியாகப் பல விஞ்ஞானரீதியான கேள்விகளும், பிரச்சனைகளும் பதில் இல்லாமல் போகும். அந்த வகையில் அதுபோன்ற தொடர்ச்சிகளுக்கு அவன் தீர்வு சொல்கிறான். சமுதாய உறவுகள் வளர்ச்சி பெற்றுள்ள காரணத்தால் ஏற்படும் புதிய தேவைகளை அவன் சுட்டிக் காட்டுகிறான். அத் தேவைகளை நிறைவேற்றும் முன் முயற்சிகளை அவனே மேற்கொள்கிறான்” என்று விளக்குகிறார். இந்த விளக்கம் இயக்குனர் பாலா மற்றும் எழுத்தாளர் ஜெயமோகனுக்குப் பொருந்தும்.

- இந்த வாரம் திண்ணையில் வெளியானது.


பசும் புல்

மார்ச் 15, 2009
பசும் புல்

பசும் புல்

விசும்பின் துளி வீழின் அல்லால் மாற்றாங்கே

பசும்புல் தலைக் காண்பு அரிது


இயற்கையும் விஞ்ஞானமும்

மார்ச் 4, 2009
இயற்கையும் விஞ்ஞானமும்

இயற்கையும் விஞ்ஞானமும்


வழிகாட்டி

பெப்ரவரி 8, 2009
வழிகாட்டி

வழிகாட்டி

 

படி

அதை நம்பு

இல்லையேல்

அழிந்து போ


என் வானம்

பெப்ரவரி 7, 2009
வானம்

வானம்


மரம்

ஜனவரி 31, 2009
மரம்

மரம்

 

மீஞ்சூருக்குப் போகும் பாதையில் நான் எடுத்த படம்.

கடவுள் மரம் படைக்கத் தெரிந்தவன்

மனிதன் கவிதை படைக்கத் தெரிந்தவன்

(எப்போதோ படித்த ஒரு ஆங்கிலக் கவிதை நினைவுக்கு வருகிறது )


வாழ்க்கை

டிசம்பர் 30, 2008

காய்ந்த ஒரு சிறு வரட்டி (பசுமாட்டின் சாணித் துண்டு) இல் முளைத்த

ஒரு செடி

வாழ்க்கை

வாழ்க்கை


சிறிய திருவடி

டிசம்பர் 28, 2008

சீதையைத் தேடி அனுமன் இலங்கை நகர் உள்ளே செல்கிறான்.
அசோக வனத்திலே அவளைக் கண்டுவிடுகிறான்.
இராமனின் கணையாழியைத் தருகிறான்.
அடையாளாங்களை விவரிக்கிறான்.
சுக்ரீவனின் நட்பைத் தெரிவிக்கிறான்.

தனிமையில் தவிக்கும் தனக்கு நன்மை சொன்னவனைச் சீதை
நன்றி தெரிவிக்கிறாள். வாழ்த்துகிறாள். பின்பு மெள்ள கேட்கிறாள்,
“இலங்கை வரும் வழியில் அளக்கவும் அரிதான அலைகடலைக்
கடக்க வேண்டுமே ? சிறு குரங்கான நீ அதை எப்படிக் கடந்திருக்கமுடியும் ?”.

இக்கேள்வியால் மனம் சிதறிய அனுமன் வானளாவி நின்றான்.
எட்டுத் திக்குகளிலும் உள்ள உயிர்கள் அவனைப் பார்த்தன.


பழக் கதைகள் 9

டிசம்பர் 22, 2008

மிகப் பெரிய பழத் தோட்டத்திற்குச் சொந்தக்காரன் அவன். அவன் தோட்டத்தில் விளையும் பழங்கள் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அவன் தொழிற்சாலையில் இந்தப் பணியில் ஈடுபடுவோர் பலர்.ஆனால், அவர்கள் தம் வாழ்நாளில் அந்தப் பழங்களை சுவைத்துப் பார்த்ததில்லை. ஏனெனிறால், அவ்விதம் செய்வோரின் வேலை உடனே போய்விடும். மேலும், அந்தப் பழங்கள் உள்ளூரில் விற்பனையாவதில்லை. அவற்றை வாங்கிச் சாப்பிட வேண்டும் என்றால் மிகுந்த விலை கொடுக்க வேண்டியிருக்கும். இந்தப் பழ ஏற்றுமதியால் அந்த ஊர் உலக அளவில் மிகப் பிரபலம்.

அவன் தன் வெற்றிக்குக் காரணமாக சொல்வான், ” ஏழ்மையும், பட்டினியும் தான் உழைப்புக்கு ஆதாரம்.”


பழக் கதைகள் 8

டிசம்பர் 14, 2008

ஒருவன் தன் தோட்டத்தில் விளைந்த மாதுளம் பழங்களை ஒரு கூடையில் இட்டு தன் வீட்டு வாசலில் வைத்தான்.
அதன் அருகில் ஒரு அட்டையில் இப்படி எழுதி வைத்தான்.
“இந்தப் பழங்கள் இலவசம். ஆளுக்கு ஒன்று என எடுத்துக் கொள்ளலாம்.”
அந்தப் பழங்கள் அப்படியே மாலைவரை இருந்தன. யாரும் அவற்றைத் திரும்பிக் கூட பார்க்கவில்லை.

மறுநாள், அவன் அந்த அட்டையில், இப்படி எழுதி வைத்தான்.
“இந்தப் பழங்களுக்கு ஒரு விலையுண்டு. விலை கொடுத்தால் தான் தெரியும் இப்பழத்தின் அருமை.”
அவன் எழுதி வைத்துவிட்டு உள்ளே செல்லும்போதே சாலையில் சென்ற மக்களால் அவன் அழைக்கப்பட்டான்.
பலர் கூடி வந்து அப்பழங்களைப் பற்றி விசாரித்து விலை கொடுத்து வாங்கிச் சென்றனர்.

-கலீல் கிப்ரன் கதையிலிருந்து


இங்கேயே இப்போதே

டிசம்பர் 9, 2008
இங்கேயே இப்போதே

இங்கேயே இப்போதே


பழக் கதைகள் – 7

நவம்பர் 30, 2008

30112008


அட்டகாசமான பாடல்கள் – யுவ்ரா(ஆ)ஜ்

நவம்பர் 18, 2008

பித்தோவன் இசைமேதையின் ஒரு இசைத் துணுக்குடன் அறிமுகமாகும் யுவ்ராஜ் இந்திப் படப் பாடல்கள் சினிமா இசையின் ஒரு அடுத்த கட்டம்.

பாடல்களின் வரிசை இப்படியாக உள்ளது.
 
 1. Main Hoon 

 2. Tu Meri Dost Hai
 
 3. Shano Shano 
 
 4. Tu Muskura 
 
 5. Mastam Mastam 
 
6.  Zindagi 
 
7 . Dil Ka Rishta 
 
8.  Manmohini Morey
 
 9. Shano – Remix

இந்த வரிசையில் வரும் தூ மேரி தோஸ்த் ஹை ஒரு இனிய பாடலைக் கேட்ட அனுபவத்தைத் தருகிறது. (இடையில் வரும் வயலின் இசை அபாரம். இளையராஜாவின் how to name it, உம்பர்கட்கரசே – திருவாசகத்தில் வரும் ஒரு வயலின் இசை துணுக்கு எனக் கலவையாக நினைவுக்கு வருகிறது.)

ஏ. ஆர். ரஹ்மான் ஒரு சிறந்த இசைக் கலைஞர் என்பதை மீண்டும் நினைவுபடுத்த வைக்கும் ஒரு இசை வரிசை.


பழக் கதைகள் – 6

நவம்பர் 16, 2008

கோழை உலகின் உயிர்த்துயரம் பொறுக்காமல் சாந்தியைத் தேடியலைந்தவனின் கதை இது.

அவன் தன் வாழ்நாளில் யாருக்கும் உதவி செய்ததில்லை. 
அவன் ஒரு கோழை.  உதவி என்ற பெயரில் ஆபத்தைப் பலமுறை தன் வாழ்வில் சந்தித்தவன். அவன் இறந்த பிறகு அவனது கணக்கு வழக்கு சரிபார்க்கப்பட்டது.

மேலுலகில். இறைவன் சொன்னார், மகனே நீ நரகத்திற்கு போகக் கடவாய்.அவன் அழுதபடி சொன்னான், “இல்லை. நான் போக மாட்டேன். நான் ஒரு நல்லது கூடவா என் வாழ்வில் செய்யவில்லை ? நீங்கள் சரிபார்த்த கணக்கில் பிழை உள்ளது” என்றான். இந்த எதிர்வினையில் குழம்பிய கடவுள் அவன் கணக்கை மறுபடியும் பார்த்தார். அதில் ஒரு நிகழ்ச்சி அவரை யோசிக்க வைத்தது.

அதன்படி ஒரு நாள் அவன் ஒரு வாழைப்பழத்தை ஒரு பிச்சைக்காரனுக்கு வீசியெறிந்திருக்கிறான். இந்த நிகழ்ச்சியை கடவுள் அவனுக்கு நினைவுபடுத்தினார். அவனும் அதனை ஒத்துக் கொண்டான். மேலும், சொன்னான், அந்த வாழைப்பழம் அழுகியிருந்தது அதனால் தான் கீழே போடுவதற்கு பதிலாக பிச்சைக்காரனுக்குத் தூக்கியெறிந்தேன். கடவுள் சொன்னார், மகனே அந்தப் பழம் பாதி நன்றாக இருந்தது எனவே, நீ செய்த செயல் புண்ணியத்தில் வருகிறது. இந்த ஒரு செயலால் உனக்கு சொர்க்கம் கிடைக்க வாய்ப்புண்டு. நீ சொர்க்கத்துக்குப் போகலாம் என்றார்.

ஆனால், அவன் செல்ல வேண்டிய வழி நரகத்தைத் தாண்டி சொர்க்கத்துச் செல்வதாக அமைந்திருந்தது. மேலும், அவன் நரக்த்தைத் தாண்டி செல்ல, அவன் வீசியெறிந்த வாழப்பழத்தை அந்தரத்தில் தொங்கியபடி பிடித்துக் கொண்டு செல்ல வேண்டியிருந்தது. அவ்விதம் அவன் செல்லும்போது, நரகத்தில் உள்ளோர் அவன் காலைத் தொங்கிப் பிடித்தபடி தம்மையும் சொர்க்கத்துக்குக் கூட்டிச் செல்லவேண்டும் என்று அடம் பிடித்தனர். இதனால், அவன் மேலும் கனமடைந்து வாழைப்பழ பிடிப்பை விட்டு நரகத்தில் வீழும் சூழ்நிலை ஏற்பட்டது.

அப்போது, அவன் சொன்னான், “நானே என்னோட பாதி நல்ல பழத்தைப் பிடித்துக் கொண்டு போறேன். இதுல நீங்க வேற தொல்லை”: என்றான். அவ்விதம் சொன்ன அடுத்த வினாடி அவன் நரகத்தில் வீழ்ந்தான்.

அப்போது கடவுள் சொன்னார், “கடைசி சந்தர்ப்பத்திலும் நீ அந்த வாழைப்பழத்தை உன்னுடையது என்று சொன்னது தான் தவறு”


பழக் கதைகள் – 5

அக்டோபர் 30, 2008

தெரியவில்லை
அறை வெண்மை என
சிகப்பு ஆப்பிளைப் பார்க்கும் வரை

- எங்கோ படித்தது


எதில் ?

அக்டோபர் 27, 2008

சுவை அறிவால் மீன் தூண்டிலில் சிக்குகிறது
தீயைக் கண்டு அதில் வீழ்ந்து விட்டில் பூச்சி இறக்கிறது.
ஸ்பரிசத்தை நம்பி யானை பிடிபடிகிறது
ஓசைக்கு அடிமையாகி மான் பிடிபடுகிறது
மணத்தை நாடி வந்து வண்டு மலரில் அகப்படுகிறது.

இந்த எல்லாப் புலன்களுக்குள்ளான மனித உயிர் எதில்

சிக்குகிறது ?


பழக் கதைகள் – 4

அக்டோபர் 23, 2008

அந்தக் கரடிக்கு மரம் ஏறத் தெரியாது.ஆனால், அந்த மரத்தில்
பழுத்த பழத்தை சாப்பிட்டுப் பார்க்க ஆசை வந்துவிட்டது.
தன் ஆசையை தன் பறவை நண்பனிடம் சொன்னது.அதற்கு
அந்தப் பறவை பழத்தைப் பறித்துத் தர உடனடியாகச் சம்மதம் சொல்லவில்லை.

கரடி அப்பறவையைச் சம்மதிக்க வைக்க ஒரு யோசனை செய்தது. அதன்படி, அக்கரடி பழம் பறித்துக் கொடுத்தால் அப்பறவைக்கு நல்ல சுவையான தேனைக் கொடுப்பதாக வாக்களித்தது. ஆனால், கரடிக்குத் தேன் கிடைக்கும் இடம் தெரியாது. இருந்தாலும், பழம் தின்னும் ஆசையில் கரடி அப்பறவையைச் சம்மதிக்க வைக்க ஒரு யோசனை செய்தது. அதன்படி, அக்கரடி பழம் பறித்துக் கொடுத்தால் அப்பறவைக்கு நல்ல சுவையான தேனைக் கொடுப்பதாக வாக்களித்தது. ஆனால், கரடிக்குத் தேன் கிடைக்கும் இடம் தெரியாது. இருந்தாலும், பழம் தின்னும் ஆசையில் கரடி அப்பறவையைச் சம்மதிக்க வைக்க ஒரு யோசனை செய்தது. அதன்படி, அக்கரடி பழம் பறித்துக் கொடுத்தால் அப்பறவைக்கு நல்ல சுவையான தேனைக் கொடுப்பதாக வாக்களித்தது. ஆனால், கரடிக்குத் தேன் கிடைக்கும் இடம் தெரியாது. இருந்தாலும், பழம் தின்னும் ஆசையில் கரடி அப்பறவையைச் சம்மதிக்க வைக்க ஒரு யோசனை செய்தது. அதன்படி, அக்கரடி பழம் பறித்துக் கொடுத்தால் அப்பறவைக்கு நல்ல சுவையான தேனைக் கொடுப்பதாக வாக்களித்தது. …………………………………………
……………………………………………………………………………………………..
……………………………………………………………………………………………..
……………………………………………………………………………………………..


பழக் கதைகள் – 3

அக்டோபர் 12, 2008

எலந்தை பழுத்திருக்கும்
ஏறி உலுக்கி விட்டா
சித்தாடைக் குள்ளிருக்கும்
செண்டு மல்லி ரெண்டு தாரேன்.

இலந்தை பழம் போல
இங்கிதமாய் நானிருக்க
சாணி உருண்டைக்காக
சாமவழி போகலாமா ?

***
கூடி இருந்த் இடம்
கும்மாச் சரம் போட்ட இடம்
வாழப் பழம் தின்ன இடம்
பாழாக் கிடக்குது பார்

***

எலுமிசம் பழம் போல
இருவருமே ஒரு வயது
யாரு செய்த தீவினையோ
ஆளுக்கொரு தேசமானோம்

***

தமிழர் நாட்டுப் பாடல்களிலிருந்து


பொம்மைக் கொலு ஜோக்கு

அக்டோபர் 8, 2008
பொம்மைக் கொலு ஜோக்கு

பொம்மைக் கொலு ஜோக்கு


பழக் கதைகள் – 2

அக்டோபர் 5, 2008

பாண்டவர்களும், கெளரவர்களும் சிறுவர்களாக இருந்த போது நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சி – அதன் புரிதல் முக்கியமான ஒன்று.

ஒரு நாள் எல்லா சிறுவர்களும், மாமரத்தில் ஏறி விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது பல சிறுவர்கள் மாமரக் கிளையில் உள்ள மாம்பழங்களைப் பறித்து உண்டனர்.

இதைக் கண்ட பீமன் மரத்தின் கீழே நின்றபடி யோசித்தான். பிறகு, தன் அருகில் இருந்த துரியோதனன், மற்றும் தருமனிடம் சொன்னான், “நாம் பழங்களைத் தேடிப் போகக்கூடாது. நம்மைத் தேடி தான் பழங்கள் வர வேண்டும்”.

இதைக் கேட்ட துரியோதனன், வியப்புடன் கேட்டான், “பீமா, இது எப்படி முடியும்?”

பீமன் இப்படி முடியும் என்று சொன்னபடி மாமரத்தின் தண்டுப் பகுதியைப் பிடித்து வேகமாக உலுக்கினான். இச்செயலால், பல மாம்பழங்கள் உதிர்ந்து கீழே விழுந்தன. மேலும், மரத்தில் அமர்ந்திருந்த கெளரவர் சிறுவர்களும் கீழே விழுந்து விட்டனர். அவர்களுக்கு பலத்த அடிபட்டது.

இதனால், கோபமுற்ற துரியோதனனும், கெளரவர்களும், பீமன் மீது பகை கொண்டனர்.

படைப்பாற்றல் முக்கியம், ஆனால், அதுவே மற்றவர்களைப் புண்படுத்துவதாக இருக்கக் கூடாது.


பழக் கதைகள் – 1

அக்டோபர் 1, 2008

ஒரு நாள் அந்த நண்டிற்கு சுவையான ஒரு இனிப்பு உண்ணக் கிடைத்தது. அதன் மணமும் சுவையும் அதை மயக்கியது. அந்த நண்டு ஆசையுடன் அந்த இனிப்பை உண்ணச் செல்லும்போது ஒரு குரங்கு அங்கே வந்தது.

அந்தக் குரங்கிற்கும் அந்த இனிப்பின் மேல் ஆசை வந்து விட்டது.
அப்போது, அந்தக் குரங்கு ஒரு தந்திரம் செய்து அந்த இனிப்பை நண்டிடமிருந்து பறிக்க செயலில் இறங்கியது.

அதன்படி அந்தக் குரங்கு, நண்டிடம் ஒரு மாங்கொட்டையைக் கொடுத்தது. பின்பு பின்வருமாறு பேசியது, “நண்டே, நான் உனக்கு காலத்திற்கும் பயன்படும் ஒரு பரிசு கொடுக்கிறேன். அது தான் இந்த மாங்கொட்டை. இதை நீ மண்ணில் நட்டு மரமாக வளர்த்தால் உனக்கு பல மாங்கனிகள் எதிர்காலத்தில் உண்ணக் கிடைக்கும். இவ்விதம் தொலைநோக்குப் பார்வையோடு சிந்தித்து உனக்கு உதவ என்னைவிட்டால் யாரும் உனக்குக் கிடையாது என்றது.

இதைக் கேட்ட நண்டு, உனக்கு நான் என்ன கைம்மாறு செய்யப் போகிறேன்? மிக்க நன்றி என்றது. குரங்கு உடனே சொன்னது, நீ எனக்குக் கைம்மாறு எல்லாம் செய்ய வேண்டாம். உன் கையில் இருக்கும் இனிப்பை எனக்கு கொடு அது போதும் என்றது.

நண்டும் இனிப்பைக் குரங்கிடம் கொடுத்துவிட்டு, மாங்கொட்டையை நம்பிக்கையுடன் மண்ணில் புதைத்து, அது மரமாக வளரும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்தது.

சில காலம் கழித்து, அந்த மாங்கொட்டை ஒரு மாமரமாக வளர்ந்து விட்டிருந்தது. அந்த நண்டிற்கு அந்த மரத்தை பார்க்கும்போதெல்லாம், குரங்கின் நினைப்பு வரும். நன்றியோடு அக்குரங்கை மனதில் வாழ்த்தும்.

அம்மாமரத்தில், பல மாங்கனிகள் பழுத்துத் தொங்கத் துவங்கின. ஆனால், நண்டினால் அம்மாம்பழங்களை மரத்தில் ஏறி உண்பது மிகவும் சிரமாக இருந்தது. அக்காலகட்டத்தில், முன்பு உதவிய குரங்கு மறுபடியும் அப்பக்கமாக வந்தது. நண்டினையும், மாமரத்தினையும் பார்த்தது. அம்மாம்பழங்களைக் கண்ட உடன் அவைகளைச் சாப்பிட குரங்கிற்கு ஆசை வந்துவிட்டது.

அக்குரங்கு, நண்டிடம் சொன்னது, “நண்டே, நான் மரத்தில் ஏறி, சுவையான மாம்பழங்களை ருசிபார்த்து உனக்குத் தரட்டுமா ? என்று கேட்டது.நண்டுக்கு மகிழ்ச்சி தாளவில்லை. குரங்கை உடனே சென்று பறித்துத் தருமாறு அவசரப்படுத்தியது.

குரங்கும், மரத்தில் ஏறி பல மாம்பழங்களை ருசித்து உண்டது ஆனால் ஒன்றைக்கூட கீழேயுள்ள நண்டுக்குத் தரவில்லை. கீழே இருந்து நண்டு, குரங்கிடம் பழங்களைப் பறித்துப் போடுமாறு மறுபடியும் கேட்டது.

இதைக் கேட்ட குரங்கிற்கு ஆத்திரம் வந்தது. அது மிகப் பெரிய ஒரு மாம்பழத்தைப் பறித்து, இந்த நண்டே பிடித்துக் கொள் என்று வேகமாகத்
தூக்கியெறிந்தது. அந்த மாம்பழத்தைப் பிடிக்க முயன்ற நண்டு, அந்த மாம்பழத்தாலேயே அடிபட்டு இறந்துபோனது.

இறக்கும்போது, அந்த நண்டு நினைத்துக் கொண்டது, “எனது நண்பன் குரங்கு மிகவும் நல்லவன். என்னால் தான் அந்த மாம்பழத்தைச் சரியாகப் பிடித்து உண்ணமுடியவில்லை”


விடுதலை

செப்டம்பர் 28, 2008

அந்த வண்ணானின் வீடு கழுதை உட்பட எல்லாப் பொருளும் அவன் வாங்கிய கடனுக்கு ஜப்தியாக வேறு ஒருவனுக்குப் போக இருந்தது.
அப்போது, அந்த வண்ணான் தான் ஆசையாக வளர்த்து ஆளாக்கிய கழுதையிடம் சொன்னான், “கழுதையே, நாளை முதல் உனக்கு வேறு எஜமானன், வேறு விதமான வாழ்க்கைச் சூழ்நிலை. எனவே, நீ இனி இங்கிருக்காதே. இந்த இரவு நேரத்தில் எங்காவது ஓடிப் போய்விடு. நான் உனக்கு விடுதலையை உபதேசிக்கிறேன்”

அதற்கு அந்தக் கழுதை , “வேறு எஜமானன், வேறு வாழ்க்கைச் சூழ்நிலை என்றாலும் நான் சுமக்கப் போகும் சுமை என்பது ஒன்றுதான். எனவே, எனக்கு ஒரு மாற்றமும் இல்லை. உனக்குத் தான் விடுதலையின் பொருள் என்பது என்னவென்று விளங்கவில்லை.” என்று சொன்னது.


விசுவாசி

செப்டம்பர் 27, 2008

அந்தத் திருடன் தன் கையில் இருந்த இறைச்சியை வீட்டுக் காவல் நாயை நோக்கி வீசியெறிந்தான். அவன் நோக்கம், அந்த நாய் அதை உண்ணும் வேளையில் வீட்டிற்குள் நுழைந்து திருடுவது தான்.

இறைச்சியை நோக்கி ஓடிவந்த அந்த நாய், அந்த இறைச்சியை முகர்ந்து பார்த்து சப்புக் கொட்டியது. ஆனால், அந்த இறைச்சியை உண்ணவில்லை. அது அந்த திருடனை நோக்கிப் பேசியது, “இந்த இறைச்சி தரும் லாபமும், சுகமும் எனக்குச் சில நிமிடங்களே. இந்த நிமிடங்கள் நான் இவ்வளவு நாள் என்னை வளர்த்த வீட்டுக்காரனுக்கு துரோகம் இழைக்கும் நிமிடங்கள்.
இந்த நிமிடங்கள் கழிந்த பின் நான் வருந்தும் காலம் இந்த நேரத்தை விட மிக அதிகம். எனவே, நான் இதைத் தொட மாட்டேன். நீ யார். உன் தேவை என்ன ? என்று வினவியது.

இந்த அணுகுமுறையில் தோல்வியுற்றத் திருடன் தலை குனிந்து பதில் பேசாமல் மெளனமாக அங்கிருந்து விலகிச் சென்றான்.


புதியது

செப்டம்பர் 23, 2008

முல்லாவின் வீட்டு வாசலில் அந்தப் பறவை மிகவும் அமைதியாக தன் சிறகுகளைத் தன் அலகால் கோதியபடி அமர்ந்திருந்தது.

இதைக் கண்ட முல்லாவிற்கு ஆச்சரியம். இதைப் போன்ற ஒரு பறவையை அவர் கண்டதேயில்லை.

அவர் பல வகையில் யோசித்துப் பார்த்தார். அவரால் ஒரு முடிவிற்கு வர இயலவில்லை.

கடைசியில் அவர் ஒரு யோசனை செய்தார். அதன்படி செயல்படவும் முனைந்தார்.

சத்தமில்லாமல் சென்று அந்தப் பறவையை அமுக்கிப் பிடித்தார்.

பிறகு, அதன் இறக்கைகள் சிலவற்றைப் பிய்த்து எறிந்தார்.

கழுத்துப் பகுதியில் உள்ள சிறகுகளின் அடர்த்தியைக் கத்தரித்துக் குறைத்தார்.

இப்போது அந்தப் பறவை அவருக்கு ஏற்கனவே கண்டறிந்த ஒரு பறவையைப் போல ஆகியிருந்தது.

முல்லா மிக்க மகிழ்ச்சியுடன் அப்பறவையை பறக்க விட்டார்.


பார்வைக் கோணம்

செப்டம்பர் 19, 2008

அந்த மான் தண்ணீரில் தன் நிழலைப் பார்த்து மகிழ்ந்தபடியே யோசனையில் ஆழ்ந்தது. அதன் கொம்புகள் அதற்கு மிகுந்த மனமகிழ்ச்சியைக் கொடுத்தது. அதன் கொம்புகளின் அழகைப் பார்த்து மகிழ்ந்தபடியே, தன் கால்களைக் கண்டது. ஒல்லியான, குச்சிபோன்ற வடிவிலான அதன் கால்கள்  அந்த மானிற்கு மிகுந்த மனக் கஷ்ட்டத்தையும், வெறுப்பையும் அளித்து.

அந்த மான் தன்க்குள் சொல்லிக் கொண்டது, ” சே, என்ன ஒரு கடவுளின் படைப்பு நான். என் கொம்புகள் அழகாகவும், கால்கள் அசிங்கமாகவும் உள்ளனவே”.

அப்போது திடீரெனப் பாய்ந்து வந்தது ஒரு சிங்கம்.
பதறி விரைந்து வேகமாக ஓடியது அந்த மான்.

அதன் வேகமான ஓட்டத்திற்குத் தடையாக அதன் கொம்புகள் காட்டு மரக் கிளைகளில் மாட்டிக் கொண்டு, வேகமாக ஓட விடாமல் தடுத்தன.
இதனால், அந்த மான் சிங்கத்திடம் மாட்டிக் கொண்டு உயிரை விட நேர்ந்த்து.

அந்தக் கடைசிக் கணத்தில் அந்த மான் மனதில் முனகியது,
” ஆபத்தில் உதவிய கால்களைப் பழித்தேன். துன்பத்தில் மாட்டிவிட்ட கொம்புகளைக் கொண்டாடினேன்.”


எந்த நாய் ?

செப்டம்பர் 17, 2008

ஒரு முறை அந்த ராஜா தன் அவையோரிடம் சொன்னார், “நான் இரண்டு நாய் வளர்க்கிறேன்”.

ஒரு நாய் பயமும்,  கோபமுமாக இருக்கும்.
மற்றது தைரியமும், மகிழ்ச்சியாகவும் இருக்கும்.

இந்த இரண்டு நாய்களும் எப்போதும் சண்டையிட்டுக் கொண்டே இருக்கின்றன”.

அவையிலுள்ள ஒருவர் சட்டென கேட்டார்,  ”சண்டையில் எந்த நாய் ஜெயிக்கும் ?

ராஜா சொன்னார், “நான் சாப்பாடு போட்டு வளர்க்கும் நாய் தான் ஜெயிக்கும்”.


கால வேகம்

செப்டம்பர் 15, 2008

அந்த முயல் ரத்தச் சகதியில் உயிரை விடும் கோலத்தில் துடித்தபடி இருந்தது.

ஒரு கழுகால் கொத்தி இந்த நிலைமைக்கு ஆளாகியிருந்தது அந்த முயல்.

அப்போது அந்தப் பக்கமாக வந்து, அதைக் கண்ட ஒரு குருவி,
” என்ன முயலே, நீ விரைந்து ஓடுவாயாமே ? காற்றின் வேகம் உன் வேகமாமே ? உன் கால்களுக்கு என்ன ஆச்சு ?”  என்று கேலி பேசியது.

இப்படிக் கேலி பேசியபடியே இருந்த குருவி, அதன் பின் பக்கம் ஒரு வல்லூறு வந்ததைக் கவனிக்கவில்லை.

பாதி பேசியபடி இருந்த குருவியை, வல்லூறு சட்டெனத் தூக்கிக் கொண்டு பறந்து போனது.

- ஈசாப் கதையிலிருந்து.


சுயநலமும், பொதுநலமும்

செப்டம்பர் 14, 2008

அந்த வீட்டுக்காரனுக்கு தினமும் ஒரு பூனையால் பெரும் தொல்லை ஏற்பட்டபடி இருந்தது.  இதனால், அவன் அந்தப் பூனையைப் பிடித்துக் கொல்லும் அளவிற்கு கோபம் கொண்டான்.

ஒரு நாள், அவன் அந்த பூனையை நேருக்கு நேர் சந்திக்கும்படியான சூழ்நிலை உண்டானது. கிடைத்த வாய்ப்பை நழுவ விடாமல், அவன் கையில் கிடைத்தக் கட்டையை எடுத்து அடிக்க ஓங்கினான்.

அப்போது, அந்தப் பூனை அவனிடம், “நண்பா, நான் உன் வீட்டு எலிகளைப் பிடித்து உண்டு உனக்கு உதவினேனே, அதற்கு நீ தரும் பரிசு இது தானா ?” என்று வினவியது.

இந்தக் கேள்வியால் சற்று யோசித்த வீட்டுக்காரன், பின்பு சொன்னான்,
“பூனையே, நீ எலிகளைப் பிடித்து உண்டது எனக்காக அல்ல. உனக்காக. எப்படியென்றால், நீ எலிகளைக் கொன்று,  உண்டு, அதன் பின் அடுத்த உணவிற்கு நீ எலிகள் சேர்த்துவைத்த உணவை உண்ணாமல், என் வீட்டு உணவை உண்டது எந்த வகையில் நியாயமானது ?”  என்று சொல்லியபடியே, அந்தப் பூனையைக் கொன்று போட்டான்.

- ஈசாப் கதைகளிலிருந்து


சந்தனமும், சாக்கடையும்

செப்டம்பர் 13, 2008

அவன் மலை மேல் வளர்ந்த சந்தன மரச் சூழலில் வளர்ந்தவன். தினமும் சந்தன நீரில் குளிப்பவன்.

ஒரு நாள் அவன் மலை மேலிருந்து கீழே இறங்கி வரும்படியான சூழ்நிலை ஏற்பட்டது.

அப்படி ஒரு நாள் அவன் கீழே இறங்கி வந்த போது, தரையில் ஒரு மனிதனைச் சந்தித்தான். அந்த மனிதன் தினமும் பிழைப்புக்குச் சாக்கடையில் குளிப்பவன். அதனால், அவன் பிறகு நல்ல தண்ணீரில் ஒரு முறை குளிக்கும்படி ஆனது அவன் வாழ்க்கை.
இந்த மனிதனைக் கண்டவுடன், மலை மேல் வளர்ந்தவனுக்கு இரு முறை குளிப்பது வியப்பு ஏற்பட்டது.

சாக்கடையில் குளிப்பவனிடம் சந்தனத்தில் குளிப்பவன்
ஏன் இப்படி இரு குளியல் உனக்கு என்று கேட்டான்.
அதற்குச் சாக்கடையில் குளிப்பவன் எப்போதும் ஒரு முறை
நல்ல தண்ணீரில் குளிப்பது தான் சரியானது என்று விளக்கினான்.
இந்த விளக்கத்தால் சந்தனத்தில் குளிப்பவனும் இரு முறை
தினமும் குளிப்பது என்றாகிப் போனது.


கூர்மை

செப்டம்பர் 8, 2008

சந்தோஷிப்பவனும், துக்கிப்பவனும் ஒருவரை ஒருவர் சந்தேகித்தனர்.
முட்டாளும், புத்திசாலியும் ஒருவரை ஒருவர் ஏமாற்றினர்.
நல்லவனும், கெட்டவனும் ஒருவரை ஒருவர் மறுத்தனர்.
சுயநலவாதியும், பொதுநலவாதியும் ஒருவரை ஒருவர் கேலி பேசினர்.
எனவே, சொர்க்கம் என்பது இல்லாமல் போனது.


விடுதலை

செப்டம்பர் 6, 2008
வானம்
வானம்
கடந்து செல்லும் படகு
தண்ணீரில் எந்த தடயத்தையும்
விட்டுச்செல்வதில்லை.
பறந்து செல்லும் பறவை
வானில் எந்த சுவடையும்
விட்டுச்செல்வதில்லை.
வெற்றி, தோல்வி,
லாபம் மற்றும் நஷ்டம்
இதயத்தில் எந்த சுவடையும்
ஏற்படுத்துவதில்லை.
விடுதலை குறித்த
மிகப் பெரிய ஞானம்
இதுவே.
- குரு ஷெங்யென்

யாருக்கு ?

செப்டம்பர் 4, 2008

நான் என் பேச்சைக் கேட்பதா ?
கடவுளின் பேச்சைக் கேட்பதா ?
குருவின் பேச்சைக் கேட்பதா ?
காலத்தின் பேச்சைக் கேட்பதா ?
விதியின் பேச்சைக் கேட்பதா ?
உலகின் பேச்சைக் கேட்பதா ?

சூழ்நிலையும் சம்பவமுமே
இதைத் தீர்மானிக்கும்
நான் யாருக்கு அடிமையென்பது.


ஆசிரியர் தினம்

செப்டம்பர் 4, 2008

இந்தப் படம் உங்கள் கணிணியின் தோற்றப் பொலிவை மாற்றிவிடும்.

ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்.

சத் சித் ஆனந்தம்

சத் சித் ஆனந்தம்


கற்றல்

செப்டம்பர் 1, 2008
கற்றுக் கொடுப்பதும் கற்றுக் கொள்வதும்
கற்றுக் கொடுப்பதும் கற்றுக் கொள்வதும்

எல்லாம் தெரிந்தவர் பேசுவதில்லை

பேசுபவர்க்கு எல்லாம் தெரிவதில்லை.

உலகம் எப்படி புரிந்து கொள்கிறது ?


சிப்பி

ஆகஸ்ட் 27, 2008

ஒருவன் தவமிருந்து ஒரு சிப்பியைப் பெற்றான்.
அந்தச் சிப்பி அவன் நினைத்த எதையும் உடனே தரும்.
அதன் மூலம் அவன் மிகுந்த மனநிறைவுடன் ஒரு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தான்.

ஒரு நாள் ஒரு சந்நியாசி அவன் வீட்டிற்கு வந்தார். அவன் அவரை அன்புடன் உபசரித்துப் பேசிக் கொண்டிருந்தபோது, அந்த சந்நியாசி ஒரு பெரிய சிப்பியைக் கையில் எடுத்தார். அந்தச் சிப்பு அவன் வைத்துக் கொண்டிருக்கும் சிப்பியைப் போலவே இருந்தது அவனை வியப்பில் ஆழ்த்தியது. ஆசையால் தூண்டப்பட்ட அவன் அந்தச் சந்நியாசியிடம் அவர் வைத்துக் கொண்டிருக்கும் சிப்பியைப் பற்றிக் கேட்டான். அதற்கு அவர் அந்த சிப்பி எதையும் உடனே இரண்டு மடங்காகத் தரும் எனச் சொன்னார்.

அவன் மேலும் ஆசையால் தூண்டப்பட்டு அந்தச் சிப்பியைத் தனக்குத் தருமாறு கேட்டான். அந்த சந்நியாசி ஒரு நிபந்தனையின் பேரில் அதைக் கொடுப்பதாக வாக்களித்தார். அது என்னெவென்றால் அவன் அவனுடைய சிப்பியை சந்நியாசியிடம் கொடுத்தால் அவர் அவருடைய சிப்பியை அவனுக்குக் கொடுப்பார். இந்த ஒப்பந்தம் அவனுக்குப் பிடித்துப் போனது. அவன் உடனே அவனுடைய சிப்பியை எடுத்துவந்து அவரிடம் கொடுத்துவிட்டு, அவரிடம் இருந்து அந்தப் பெரிய சிப்பியை வாங்கிக் கொண்டான்.

அன்று இரவே அந்தச் சிப்பியைச் சோதிக்க எண்ணி அவன் அந்தச் சிப்பியிடம் ஒரு மூட்டை தங்கம் கேட்டான். அதற்கு அந்தச் சிப்பி அவனிடம் ஏன் இரண்டு மூட்டைத் தங்கம் தருவேனே என்றது. அவன் அதனிடம் ஒரு அழகிய பெண்ணை வரவழைத்துத் தரும்படிக் கேட்டான். அதற்கு அந்தச் சிப்பி இரண்டு பெண்களாகத் தருவேனே என்றது. அவன் கேட்பதற்கெல்லாம் இவ்விதமே பதில் சொல்லியபடி இருந்தது அந்தச் சிப்பி.

அதிர்ச்சியில் ஆழ்ந்த அவன் வெளியே ஓடிவந்து சந்நியாசியைத் தேடினான். அவரை அங்கே காணவில்லை.


குருவும், சீடனும்

ஆகஸ்ட் 18, 2008

ஒரு குரு ஆப்பிள் பழத்தைக் காட்டி இது எந்த குடும்பத்தைச் சேர்ந்தது? என்று சீடனைப் பார்த்துக் கேட்டார்

சீடன் சொன்னான் “கனிகளின் குடும்பத்தைச் சேர்ந்தது”.

பையிலிருந்து ஒரு காசை எடுத்து,” இது எந்தக் குடும்பத்தைச் சேர்ந்தது? ” என்று கேட்டார் ஆசிரியர்.

“இது உலோகக் குடும்பத்தைச் சேர்ந்தது” என்றான் சீடன்.

“நான் எந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவன்?” என்றார் குரு.

“காட்டுவாசி அல்லது மிருகக் குடும்பம்” என்று சொல்வது மரியாதை ஆகாது என்று யோசித்த சீடன், தயங்கியபடி சொன்னது,

“நீங்கள் சொர்கத்தின் குடும்பத்தைச் சேர்ந்தவர்”

அதைக் கேட்ட குரு மகிழ்ந்து, “அந்தக் குடும்பத்தில் இருக்கும் அருகதையை கடவுள் எனக்குக் கொடுக்கட்டும்” என்றார்.


அழைப்பு

ஆகஸ்ட் 12, 2008

அனுகூலமான நேரம்
பக்குவமான சமயம்
அப்போது தான் அழைப்பு விடப்படும்
அழைப்பதென்னவோ எளிதானது
அதைச் செவியேற்பது அவ்வளவு சுலபமில்லை


சுவை

ஜூலை 15, 2008

 

ஊமையின் வெல்லம்

முதலில்

சுவையைப் பெறு.

முடிந்தால்

மெளனமாக இரு.


தசாவதாரம் ஜோக்கு

ஜூலை 11, 2008

நபர்1: தசாவதாரம் நேற்று பார்த்ததாகச் சொன்னாயே, படம் எப்படி ?

நபர்2: படம் எதிர்பார்த்த மாதிரி இல்லை

நபர்1: ஏன் ?

நபர்2: படத்தில அசின் full ஆ வராங்க.


மயக்கும் குரல்

ஜூன் 22, 2008

இன்று விஜய் டீவி இசைக் குடும்பத்தில் ஒரு பெண்மணி பழைய இந்திப்பாடல் ஒன்றை மிக அருமையாகப் பாடினார். அவருக்கு என் நன்றி.

(இவரை விட போனா வருவீரோ (படம்: வீராப்பு)என்ற பாடலைப் பாடிய பெண்மணிக்கு கூடுதல் மார்க் கிடைத்தது. அப்பாடலும் நன்றாகவே பாடப்பட்டது)

இப்பாடல் இன்று முழுவதும் என்னைத் தொந்திரவு செய்தபடியே உள்ளது.

மழைக்கு ஒதுங்கிய நேரத்தில் பாடிய பாடலாக இப்பாடல் திரைப்படத்தில் எடுக்கப்பட்டிருக்கும்.

அப்பாடலின் விவரங்கள் இதோ:

பாடல் – போல் ரே பப்பிஹரா… போல் ரே பப்பிஹரா
திரைப்படம்: Guddi (1971)
பாடியவர்: வாணி ஜெயராம்
இசை: வசந்த் தேசாய்
பாடலாசிரியர்: குல்சார்
ஆண்டு: 1971
தயாரிப்பாளர்: என் சி சிப்பி
இயக்குனர்: ஹிரிஷிகேஷ் முகர்ஜி
நடித்தவர்கள்: அமிதாப் பச்சன், அசோக் குமார், தர்மேந்திரா, ஜெயா பச்சன், சுனிதா சன்யால், விஜய் ஷர்மா

இப்பாடலின் (ஆங்கில) வரிகள் இந்தியிலிருந்து ஆங்கிலத்தில்.
 
Bole re papiiharaa papiiharaa
Nit man tarase, nit man pyaasaa
Nit man pyaasaa, nit man tarase
Bole re…

Palako.n par ik buu.nd sajaae
Baithii huu.n saavan le jaae
Jaae pii ke des me.n barase
Nit man pyaasaa, nit man tarase
Bole re…

Saavan jo sa.ndesaa laae
Merii aa.nkh pe motii chhaae
Jaae mile baabul ke ghar se
Nit man pyaasaa, nit man tarase
Bole re…

இதன் எம்பி3 வடிவத்தை இங்கு இணைத்துள்ளேன்.

bol re by vaani jeyaram

நீங்களும் கேட்டு மகிழலாமே ?

 

 


பறவை குறித்து கவிதை எழுதுபர்களுக்கு …

ஜூன் 8, 2008

போட்டியில் வென்ற கோழிக்கு  தங்கத்தில் மெடல் கழுத்தில்

பெருமையில் இங்கும் அங்கும்  திரிந்த கோழியைக் கண்ட

சிறப்பு விருந்தினர் ஆசையுடன் சொன்னார்

பசியோடிருப்பவனுக்கு காசு தெரிவது போல

உணவின் ருசியை நேரடியாகச் சுவைக்கத் தெரியாத

பறவை குறித்து கவிதை எழுதுபர்களுக்கு

கோழிக்காலின் ருசி தெரியுமா ?


கடல் மீன்

ஏப்ரல் 20, 2008

அப்பறவையானது உயர்ந்த விஷங்கள், உணவு இதில் மட்டும் கவனம் செலுத்தும். உணவாக கிடைப்பதற்கு அரிதான கனிகளை மட்டுமே தேர்ந்தெடுத்து உண்ணும். குடிக்க மூங்கில் உள்ளே தேங்கி நிற்கும் மழை நீரை மட்டுமே பருகும். வசிப்பதும் அவ்வாறே. தான் வசிக்கும் இடத்தில், தொடர்ந்து வாழமுடியாத சூழ்நிலை ஏற்பட்டால் அந்த இடத்தில் தன் கூட்டிற்கு மேலே தேன் தினமும் சொட்டும்படியான ஒரு அமைப்பு இருந்தாலும் அங்கே வசிக்காது. உடனே, இடத்தைக் காலி செய்துவிடும். தனக்குப் பிடித்தமான ஒரு இடத்தில் மட்டுமே வாழும்.

அப்போது வானில் அந்தப் பறவையானது மிதமான வேகத்துடன் பறந்து சென்று கொண்டிருந்தது.

கீழே, செத்த எலி ஒன்றைக் கொத்திக் கொண்டிருந்த காக்கை வானில் அப்பறவையைக் கண்டவுடன் சொன்னது, ” சூ, போ, போ வராதே இந்தப் பக்கம்” என்று சொன்னபடி செத்த எலியை சட்டென மறைத்துக் கொண்டது

இதைப் பார்த்த மீனுக்கு ஒரே ஆச்சரியம். அது காக்கையை கேட்டது, “ஏன் இப்படி நடந்து கொள்கிறாய்?, “. காக்கை சொன்னது, “அது காக்கை அல்ல, அதனால் தான் இப்படி. உனக்கு இது புரியாது”.

மீன் சொன்னது, “உங்கள் பறவை இனத்தை இணைப்பது பறத்தலும், ரத்த சம்பந்தமான தொடர்பும் அல்ல. சக ஜீவனை மதிப்பதும், ஒவ்வொருவரின் வாழ்விலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வழிகளையும், சூழ்நிலைகளையும் உருவாக்குவதில் தான் உள்ளது என்பது உனக்குத் தெரியாதா ? என்று கேட்டது.

அதற்குக் காக்கை சொன்னது, “உனக்கு கடல் என்றால் என்ன என்று தெரியுமா ? “பெரிதாகப் பேச வந்துவிட்டாய் என்று கோபத்துடன் சொன்னது.

மீனுக்கு கடல் என்றால் என்ன என்று தெரியவில்லை. அதற்கு ஆசை வந்துவிட்டது. கேள்வியையும், தேடலையும் எங்கேயிருந்து துவங்கலாம் என்று யோசித்தது.

ஒரே கூரையின் கீழே வாழும் தன் இனத்திடம் கேட்டால் தக்க பதில் கிடைக்கும் என்று நம்பியது. சிறியது, பெரியது, வயதானது எனப் பலவிதமான மீன்களையும் தேடிப்போய்ப் பேசியது. அதற்கு பதில் கிடைக்கவில்லை. அறிவுரைதான் கிடைத்தது.

மீன் கூட்டத்தில் உள்ள ஒரு மீன் சொன்னது, “நமக்கு இங்கே பாறை இடுக்குகளில் தண்ணீரின் வேகமான ஓட்டத்திற்கு எதிராக இங்கேயே நின்று வாழவே நம் சக்தியனைத்தும் செலவாகிறது. இதில் கடல் என்றால் என்ன? என்ற கேள்வி எனக்குச் சிரிப்புதான் வருகிறது.” என்று சொல்லிக் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தது.

தண்ணிரின் ஓட்டத்திற்கு எதிராக வாழ்வதில் உள்ள சவால் உனக்குப் பிடிக்கவில்லையா ? இச்சவாலை எதிர்க்கொள்ளும் வழிகளை விளக்கி ந்ம முன்னோர்கள் சொன்ன அறிவுரைகளும் எழுதிய புத்தகங்களும் உனக்குக் கண்ணில் படவில்லையா ? உன் அறிவும் முயற்சியும் இந்த வழியில் சென்றால் நம் இனத்திற்கு பெருமை மற்றும் பயனுள்ளதும் கூட என்று மற்றொரு மீன் சொன்னது.

இந்தப் பேச்சுக்களின் போக்கு பிடிக்காத பாதையில் செல்வதை உணர்ந்த மீன் “என் மனதை மாற்றிக் கொள்ளும் உரிமை எனக்கு மட்டுமே உண்டு. என்னால் அதன் மூலம் ஒரு மாறுபட்ட எதிர்காலத்தையோ, வேறுபட்ட இறந்த காலத்தையோ தேர்தெடுக்க முடியும்” என்று தனக்குள் சொல்லிக் கொண்டது.

தனக்குத் தெரியாமலே குறிப்பிட்ட திசையில், வேகத்தில் செல்லும் மேகம் போல, அந்த மீன் தனக்கான ஒரு வழியைத் தேர்ந்தெடுக்க முயன்றது.

அது தேர்ந்தெடுத்த வழி, “தண்ணீரின் ஓட்டத்திற்கு எதிராக இருக்க முயற்சிக்காமல், அந்த ஓட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டு சென்று விடுவது
.”
ஒரு நாள் தண்ணீரின் ஓட்டத்தில் வேகம் மிக அதிகமாக இருந்தது. இது தான் தருணம் என்று மீன் அந்த நீரோட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டது. அந்த வேகமும், சீற்றமும் மீனுக்குத் தாங்க முடியாமல் இருந்தது. அந்த வேகத்தில் பல இடங்களில் முட்டி மோதி, ஒரு தருணத்தில் கடல் நீர் பரப்பிற்கு மேலே அம்மீன் தூக்கியெறிப்பட்டது.

கடலுக்கு மேலே பறந்த அம்மீன் கடலின் விரிந்த பரப்பைக் கண்டது.

சிலிர்த்தது.

தன் தரிசன அனுபவத்தை இவ்விதமாக வரிசைப் படுத்திச் சொல்லிக் கொண்டது.

1. எனக்குத் தெரியாது என்று ஒப்புக் கொள்ளப் பழகிக்கொண்டேன்
2.எனக்குக் குழப்பம் வரவில்லை என்றால் நான் சரியாகச் சிந்திக்கவில்லை என்று பொருள்.
3. பிறப்பு என்பது ஒரு செயல் அல்ல, அது தொடர்விளைவு.

இவ்விதமாக தரிசன அனுபம் அடைந்த அம்மீன் மறுபடியும் சாதாரண மீன்கள் நடுவே வாழ கடலுக்குள் சென்றுவிட்டது.

இப்போது அந்த மீனுக்கும் மற்ற மீன்களுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை.


எஸ்.எம்.எஸ் ஜோக்கு

ஏப்ரல் 14, 2008

எனக்கு வரும் கைபேசி குறுஞ்செய்திகளில் நகைச்சுவை என்ற பெயரில் வரும் சில செய்திகள் சிலசமயம் புன்னகையை வரவழைப்பவை.

உதாரணம் 1
நண்பன்1: உங்க மனைவிக்கும் உங்க அம்மாவுக்கும் சண்டை வந்தா நீங்க யார் பக்கம் நிப்பீங்க ?
நண்பன்2: எங்க வீட்டு பீரோக்கு பின்னாடி நிப்பேன்

உதாரணம் 2
நிருபர்: நீங்க சோப் போட்டு குளிப்பீங்களா? அல்லது ஷாம்பூ போட்டு குளிப்பீங்களா ?
நடிகை: நான் கதவை தாப்பா போட்டுக் குளிப்பேன்

கவிதை போல வந்த குட் நைட் செய்தி ஒன்று.

அப்படி என்ன ஜோக் சொல்லிவிட்டது காற்று ?
இப்படி குலுங்கக் குலுங்கச் சிரிக்கிறது மரம் ?
யோசித்தவாறு உறங்குங்கள்


அட்ரா அட்ரா நாக்கு முக்கா

ஏப்ரல் 13, 2008

இன்று சரமாரியாக கேபிள் டிவியில் சினிமா பார்த்தேன்.

வல்லரசு

வெயில்

அந்நியன்

பருத்தி வீரன்

திருபாச்சி

:-)

சன் டிவி மஸ்தானா நிகழ்ச்சியில்  அட்ரா அட்ரா நாக்கு முக்கா என்ற பாடல் ( சினிமா பாட்டு? ) மிகவும் நன்றாக இருந்தது.

இந்தப் பாடலைக் கேட்டிருக்கிறீர்களா ?

 


உறையில் உள்ள மரக் கத்தி

நவம்பர் 18, 2007

அன்புடன் என் வலைப்பதிவிற்கு வாருங்கள்.
நான் மிகவும் களைத்து விட்டேன்.
அதிகமாக எழுதியதால் அல்ல.
நான் மேலும் என்ன எழுத வேண்டும் என்ற எண்ணத்திலேயே இந்தக் களைப்பு.
முக்கியமான கண்டுபிடிப்புகளைக் கூற சில வார்த்தைகளே போதும்.
அதிகமாகச் சொல்லிக்கொண்டே போனால் என்ன பயன் இருக்கும் ?

மாசற்ற சில சொற்களால் சொல்லத் தெரியாதவரே
உண்மையில் பல சொற்களால் சொல்லிக் கொண்டிருக்க விரும்புவர்.

எனக்குச் சுய திருப்தி என்ற உணர்வு இன்னும் வரவில்லை.
இரவில் உலாவும்போது, சிறந்த இசையைக் கேட்கும் போது,எனக்குத் தேவைப்படும் பொருட்கள் எல்லாம் எனக்குக் கிடைத்துவிடும் போது இந்த மாதிரியான எண்ணங்கள் என்னில் எழுகும்போது, அந்த எண்ணங்களை என்னெவென்று அழைப்பது என்பது எனக்குத் தெரியவில்லை.

நான் கண்ட சாகசங்கள், என் நினைவில் ஊறித் திளைத்தவைகளை என்னால்
உங்களிடம் சொல்லிப் பகிர்ந்து கொள்வதை இனிமேலும் தள்ளிப்போட முடியாது.

என்னிடம் எந்த உயர்வு, தாழ்வுமனப்பான்மை, பயம் என்பது கிடையாது.
“நான் எழுதுவதில் மிகவும் களைத்து விட்டேன்” இதுபோன்ற எழுத்துக்கள் நன்றாக வேலை செய்கின்றன.
இவை பழைய முறைகளாக உங்களுக்குத் தோணலாம்.
உங்களுக்கு யாருமே தாந்திராத ஒரு மர்ம மகிழ்ச்சி ஒன்று என்னால் தர முடியும்.
அது தனித்தன்மை வாய்ந்த ஒன்று.
நான் ஒருவகை எழுத்துக் கலையை வளர்த்துக் கொண்டேன்.நன்கு பயிற்றுவித்துக் கொண்டேன். அதன் மூலமாக.

யாருக்கும் எந்த மன்னிப்பும் கிடையாது என்பது என் கொள்கை.
நல்லெண்ணம், பொறுப்பற்ற தன்மை, கஷ்டமான சூழ்நிலைகளை நான் ஒப்புக்கொள்வதில்லை. என்னைப் பொறுத்தவரை குற்றங்கள் விடுவிப்பதும் இல்லை, ஆசீர்வதிப்பதும் இல்லை. செயலால் செயல் எல்லாம் சேர்த்து மொத்தமாகப் பெரிய வடிவம் எடுக்கிறது.

நான் உலகில் மற்றவர்கள் போல வாழ்வது நல்லது என்று கற்றிருக்கிறேன்.
அதற்கு மற்றவர்கள் என்னைப் போல வாழ்வது நல்லது என ஏன் கற்கவில்லை ?

நாம் எல்லோரும் ஏன் ஒரே மாதிரி இல்லை ?
தொடர்ந்து ஒரே கேள்விக்கு விடை தெரிந்தாலும்,
அதே விஷயத்தைப் பல கோணங்களில் விவாதிக்கிறோம்.
ஏன் ?
தயவு செய்து சொல்ல முடியுமா ?

உண்மையைச் சொல்வதானால் இப்படிச் சொல்லலாம்.
“அடிமைத்தனமின்றி எந்த தீர்வும் கிடையாது”

முன்பொரு காலத்தில் நான் சுதந்திரம் பற்றி மிக அதிகமாகப் பேசியவன்.
நாள் முழுவதும் பேசுவேன்.
நான் சொல்வதை எதிர்ப்போரை சுதந்திரம் என்ற வாள் வீசி பயமுறுத்துவேன்.
எனது இந்த வகைப் பேச்சால் என் ஆசைகளையும், அதிகாரத்தையும் பெருக்கியுள்ளேன்.
நான் செய்ததை நியாயப்படுத்த அதிகமாகப் பாடுபட்டுள்ளேன்.
இதற்கு விலையாக நான் பெற்றது, அன்பாகப் பேசும் நண்பர்கள் கிடையாது.
தனிமையில், தடுக்கப்பட்ட அறையில் தனியாக !
சுதந்திரம் ஒரு தாங்க முடியாத பளுவாக மாறிவிட்டது.
எனது ஒவ்வொரு அளவுக்கு மீறிய செயலும் எனது பலத்தைக் குறைத்துவிட்டது.
இது ஒரு நீண்ட துக்கம்.
இந்த துக்கத்தைப் போக்க ஒரே வழி உண்டு.

எஜமானர் இல்லாத ஒருவரின் நாட்கள் மிகக் கொடுமையானவை.
ஆகவே ஒருவர் ஒரு எஜமானரைக் கட்டாயமாக்த் தேர்ந்தெடுக்க வேண்டும்.

இது ஒரு வெட்கக்கேடு இல்லையா?
இந்த வெட்கம் என்னைத் தாக்குகிறது.
இதை ஒரு கெளரவத்தோடு செய்ய வேண்டும் என்ற உணர்வு உண்மையில் என்னை மேலும் தாக்குகிறது.

என்னிடம் இருப்பது நல்ல மனம் நிறைந்த சிரிப்பு, காந்தம் போலக் கவரும் ஒரு கைக்குலுக்கல்.
மனித வழி என்பது இது தான். இரு முகம் கொண்டவன், தன்னை நேசிக்காமல் அடுத்தவர்களை நேசிக்க முடியாது.

சுருக்கமாகச் சொல்லப்போனால் நான் மகிழ்ச்சியாக வாழத் தேவையான மிக முக்கியமான ஒன்று
மற்றவர்கள் வாழாமல் இருப்பதைத் தேர்ந்தெடுப்பது.

தவறு செய்திருந்தாலும் தண்டிக்கபட முடியாததாக அமைக்கப்பட்ட ஒரு வாழ்க்கை !

ஏனோ இப்பாடல் நினைவில் சிறகடித்துப் பறக்கிறது.

வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி
மக்கள் மனதில் நிற்பவர் யார் ?
மாபெரும் வீரர் மானம் காத்தோர்
சரித்திரம் தனிலே நிற்கின்றார்.


உருளைக்கிழங்கு நடனம்

நவம்பர் 7, 2007

நியூசிலாந்து நாட்டில் மாவோரிகள் என்ற ஒரு இனம் உண்டு. இவர்கள் மலைப்பகுதியில் உருளைக்கிழங்கு பயிர் செய்பவர்கள். அங்கே மிகுந்த மழையால் உருளைக்கிழங்கு பயிர் சேதமடைவதுண்டு.  எனவே, இந்த இனப் பெண்கள் பயிர் வளரும் காலத்திலே, மழையும், காற்றும் வேகமாக வீசுவதுபோலவும், உருளைக்கிழங்கு பயிர் அதனை எதிர்த்து செழித்து வளர்வது போலவும் ஒரு பாவனையான நடனம் நிகழ்த்துவர்.

இந்த பாவனையும், மனதில் நினைத்த நிகழ்ச்சி நடைபெற வேண்டும் என்ற வேண்டுகோளும் தான் ஆதிகால மந்திரம்.

இந்தச் செயலில் நடனம் என்ற பொழுதுபோக்கும், பேசாத வேண்டுதல் என்ற ஒரு பிரார்த்தனையும் உண்டு.

மேலும், இச்செயல் ஒரு ஆதிகால மெசேஜ் உள்ள சினிமா !


மீன் வாழ்க்கை

செப்டம்பர் 2, 2007

ஜப்பானியர்களுக்கு மீனை அப்படியே உயிருடன் இருக்கும் தன்மையுடன் (fresh) சாப்பிடப் பிடிக்கும். ஜப்பானில் கடற்கைரையோரம் மீன்கள் பிடிக்கக் கிடைக்காது. அதற்காக, அவர்கள் நீண்ட தூரம் கடலுக்குள் சென்று
மீன்களைப் பிடித்து, பின் கரைக்குத் திரும்புவது இயல்பானது (திரும்ப வரும் நேரம் அதிகம்). அப்படி அவர்கள் திரும்ப வரும்போது மீன்கள் இறந்து விறைத்து விடுகின்றன. இதனால், அதன் சுவை உண்ணும்போது மாறுபடுவதை ஜப்பானியகள் விரும்பவில்லை.

மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள் இதற்காகச் சில முயற்சிகள் மேற்கொண்டார்கள்.

1. கடலுக்குள் பிடித்த மீன்களை ஐஸ் பெட்டிகளில் வைத்துக் கொண்டு வருவது – அப்படியும் சுவை ஏற்புடையதாக இல்லை.

2. மீன்பிடி படகுக்குள் ஒரு நீர்த்தொட்டி அமைத்து அதில் பிடித்த மீன்களைக் கரைக்குவரும்வரை உலவவிடுவது. இந்தச் செயற்கையான அமைப்பில் மீன்கள் அலைந்து திரிவது இயற்கையாக இல்லாமல் போனது. அதனால், அவற்றின் சுவை உண்ணும்போது மாறுபட்டது – இதுவும் வாடிக்கையாளர்களுக்குத் திருப்தி தரவில்லை.

3. நீண்ட நாள் யோசனைக்குபின் ஜப்பானிய மீனவர்கள் இப்பிரச்சனைக்கு ஒரு தீர்வு கண்டார்கள்.

அது மீன்பிடி படகில் ஒரு நீர்த்தொட்டி, அதில் பிடிபட்ட மீன்களைக் கரைக்குத் திரும்பும்வரை உலாவ விடுவது – ஒரு சுரா மீன் அத்தொட்டியில் அச்சிறு மீன்களை சாப்பிட இருக்கும். அச்சுரா மீனால் சில மீன்களையே
கரைக்குவரும்வரை உண்ண முடியும். மற்ற மீன்கள் சுராவின் துரத்தலுக்குத் தப்பிக்க அங்கும் இங்கும் ஓடியபடி இருக்கும்.

கரைக்கு வந்தபின் மிச்சம் இருக்கும் மீன்களைப் பிடித்துச் சாப்பிடும்போது அவற்றின் சுவை உயிர்த்தன்மையுடன் (fresh) இருந்தது.

வாடிக்கையாளருக்கும் திருப்தி.

இந்தச் செய்தியைப் படித்த எனக்கு ஏதோ ஒரு கருத்து மனிதர்களுக்கும் இதில் இருப்பதாக உள்ளுணர்வு சொல்கிறது.


பன்னீர் புஷ்பம்

ஆகஸ்ட் 28, 2007

நான் நீரில் ஒளிர்கின்ற ஒளி
நான் அந்த ஒளியில் ஒளிர்கின்ற பிரம்மம்
பிரம்மம் எனப்படுபவர் நானே
நான் என்பதில் பெருமிதம் அடைகிறேன்
நான் பிரம்மம்
நான் நான்தான்
என்னை நான் ஆஹூதியாக்குகிறேன்


வாழ்வு

ஆகஸ்ட் 12, 2007

மனித மனம் தோல்விகளையும், அவமானங்களையும் பதிய வைக்கும் அளவிற்கு வெற்றியையும், சந்தோஷத்தையும் பதிய வைத்துக்கொள்வதில்லை என்று பரமஹம்ச ஸ்ரீ நித்யானந்தர் சொல்வது எனக்கு ஏற்புடையது.

ஆனால், ஆனந்தமாய் வாழ முழுமனதுடன் முடிவெடுப்பது என்பது ஒவ்வொருவரின் கையில் தான் உள்ளது என்பதில் நான் முரண்பட்டுப் போகிறேன். இதற்கான விளக்கம் பின் வரும் ஒரு கதையில் நான் உணர்ந்தேன்.

வெளிச்சமற்ற இடத்தை இயல்பாக இருள் சூழ்ந்துகொள்வது போல மகிழ்ச்சியற்ற மனம் என்றாலே கவலை என்பது அங்கே புகுந்துவிடுவது ஒரு இயல்பு.

வாழ்வின் ரகசியங்களைக் கற்றுக்கொள்ள கற்றுக்கொள்வதற்கு முதலில் எங்கு பாடத்தைத் துவங்குவது ?

மனம் போல எண்ணம் -
எண்ணம் போல வாழ்வு -
வாழ்வு போல வெற்றி -
வெற்றி போல உடல் நலம் -
உடல் நலம் போல மனம்

என்னும் சுழற்சியில் வாழ்வை மனதில் துவங்கி மனதில் முடியும் என்று எண்ணாமல் எங்கு வேண்டுமானாலும் துவங்கலாம் என்பது என் எண்ணம். இதில் மகிழ்ச்சிக்கு இடம் எங்கு உள்ளது ?

மகிழ்ச்சியைப் பழகுவது எப்படி என்ற கேள்விக்கு விடை ஒரு குறுகிய வட்டத்தில் வாழும் ஒரு வாழ்வில் இல்லை என்று சொல்லலாம்.

‘நான்’, ‘எனது’ என்ற குறுகிய வட்டத்தில் வாழும் ஒரு வாழ்வில் மகிழ்ச்சி என்பதைக் கற்பனை செய்து பார்ப்பது கூட கடினமான ஒன்று.

கள்ளம் கபடம் இல்லாமல் நம்மை முழுமையாக நம்பிப் பழகும் பிறருக்கு நாம் அளிக்கும் ஒரு கைமாறு தான் மகிழ்ச்சி.

நம் வாழ்வில் சந்திக்கும் ஒவ்வொருவரும், ஒவ்வொரு சம்பவமும் ஏன் ஒவ்வொரு நிமிடமும் நம் மன மகிழ்ச்சியை தீர்மானிக்கும் சக்தி படைத்தவை.

பொருளியல் என்பது வாழ்க்கை வாழ என்னென்ன விருப்பத்தேர்வு உண்டு என்பதைச் சொல்லும் ஆனால் சமூகவியல் என்பது வாழ்க்கை வாழ விருப்பத்தேர்வற்ற நிலையை விளக்கி எப்படி வேறு வழியில்லாத நிலையில் ஒரு வாழ்வு வாழ வேண்டியிருக்கிறது என்பதைச் சொல்லும் என்று ஒரு சொலவடை உண்டு.

அந்த வகையில் சமீபத்தில் நான் படித்த ஒரு பெண்ணின் வாழ்க்கை கதை கதிகலக்க வைக்கும்படி இருந்தது.

தம் அந்தஸ்துக்கு ஏற்ப ஒரு குடும்பத்தில் மணம் முடிக்க பெற்றோர் நினைத்த காலத்தில் அப்பெண்ணும், அவளின் காதலனும் ஊரைவிட்டு ஓடி வேறு இடத்திற்குச் சென்று மணம் புரிந்து கணவன் மனைவியாக வாழத் துவங்கினர்.

சில காலத்திற்குப்பின் அப்பெண் கர்ப்பவதியானாள். முதல் குழந்தை பிறக்க இருக்கும் சமயத்தில் தாய் வீட்டில் இருக்க விருப்பமாக உள்ளது என்று தன் ஆசையைக் கணவனிடம் தெரிவித்தாள். ஆனால் கணவன் ஒப்புக்கொள்ளவில்லை.

மீண்டும் இரண்டாம் முறை கர்ப்பவதியானபோது அப்பெண் பிறந்தவீடு செல்ல பெரிதும் விரும்பினாள். முன்போலவே கணவன் மறுக்க அவள் மிகுந்த பிடிவாதத்துடன், தன் தாய் வீட்டிற்குச் சென்றே ஆக வேண்டும் என்று அடம்பிடிக்க கணவன் அதற்குச் சம்மதித்தான்.

இருவரும், முதல் குழந்தையுடன் புறப்பட்டுச் செல்லத்துவங்கினர். அப்பெண் தாய் வீட்டுக்குப் போகும் முன்பே வழியிலேயே குழந்தை பிறந்துவிட்டது. அந்த நிலையில் கணவன் புதிதாகப் பிறந்த குழந்தைக்கும் தாய் (தன் மனைவி)க்கும், ஒரு குடிசை அமைக்க எண்ணி செடி கொடிகளைச் சேகரிப்பதற்காகப் பக்கத்தில் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதிக்குச் சென்றான். அங்கே அவனை ஒரு பாம்பு கடித்துவிட அவன் அங்கேயே இறந்துபோனான்.

பிரசவம் ஆகியிருந்த அப்பெண் கணவனைக் காணாது மனம் குழம்பி, நடக்கக்கூட சக்தியில்லாத நிலமையில் தானே சென்று தேட முடிவு செய்தாள். காட்டிற்குள் சென்று தேடினாள். மூத்த குழந்தையைக் கையில் பிடித்தபடியும், அப்போதுதான் பிறந்த குழந்தையைக் கையில் அணைத்தபடியும் சென்ற அவள், தம் கணவன் பாம்பு கடித்து வாயில் நுரைகக்கி இறந்த கோலத்தைக் கண்டு கலங்கித் துடித்தாள்.

பிறகு, மனம் நொந்தபடி, குழந்தைகள் சகிதம் தம் பெற்றோர் வீட்டுக்கு நடந்து செல்லத் துவங்கினாள்.வழியிலே ஒரு ஆறு அப்போது குறுக்கிட்டது. இரண்டு குழந்தைகளுடன் அவளால் ஆற்றைக் கடக்க முடியாது என்பது உணர்ந்து, மூத்தக் குழந்தையை கரையிலேயே நிற்கச் சொல்லிவிட்டு, பிறந்த சிசுவுடன் மறுகரையை அவள் அடைந்தாள்.
அங்கே சில கொடி தழைகளை வைத்துச் சிசுவை மறைவாகக் கிடத்தினாள். பிறகு மூத்தக் குழந்தையை அழைத்துவர, மீண்டும் ஆற்றைக் கடந்து செல்லத் துவங்கினாள்.

பாதி வழியில் ஒரு பருந்து, மறுகரையில் மறைவாக வைக்கப்பட்டச் சிசுவை நோக்கி வேகமாக வருவதைக் கண்டு மனம் பதைத்து, அப்பருந்தை விரட்ட இரண்டு கைகளையும் தூக்கி வீசியபடியே, அலைபாய்ந்தாள். அவள் செய்கையைக் கண்ட மூத்தக் குழந்தை தன் தாய் தன்னை வரும்படி அழைப்பதாகப் புரிந்துகொண்டு ஆற்றில் இறங்கிவிட்டது.

அப்பெண் இப்போது எந்தக் குழந்தையையும் காப்பாற்றும் நிலையில் இல்லாத ஒரு நிலை ஏற்பட்டுவிட்டது. ஆற்றில் வெள்ளம் திடீரென மிகுந்து மூத்தக் குழந்தையை அடித்துச் சென்றுவிட்டது. பருந்து சிசுவை எடுத்துச் சென்றுவிட்டது. இரண்டு காட்சிகளும் அவள் கண் முன்னே ஒரே சமயத்தில் நிகழ்ந்தது.

மனம் உடைந்து வேறு கதியில்லாத நிலையில், அவள் தன் பெற்றோர் வீட்டை நோக்கி நடக்கத் துவங்கினாள்.

அவள் தம் பெற்றோர் வீட்டை அடைந்தபோது, முதல்நாள் பெய்த மழையில் அவ்வீடு இடிந்து விழுந்துவிட்டதாகவும், அந்த இடிபாட்டில் அவள் பெற்றோர் மற்றும் சகோதரர்கள் மரணமடைந்துவிட்டதாகவும் அக்கம் பக்கத்தில் அவளிடம்சொன்னார்கள்.

அப்பெண் அலறி அழுதாள்.புலம்பினாள். சிரித்தாள். என்று முடிவடையும்.

இக்கதை கொடும் துன்பங்கள், கடும் வினைகள் என்றால் என்ன ? என்பதை அழகாக விளக்குகிறது.

கல்லாய் இறுகிப்போன மனம் அழகுச் சிலையாக மாறும் ரகசியம் எங்கு உள்ளது ?


எனது கவிதைகள்

ஆகஸ்ட் 5, 2007

கடந்த சில நாட்களாக என் மனதில் தோன்றும் சில கற்பனைகளை இரண்டு வார்த்தை (அ) மூன்று வார்த்தை, மூன்று வரி என்று அடக்கி யோசித்த போது, உருவான கவிதைகள் இவை, இப்போது உங்கள் வாசிப்புக்கு.

இவற்றிற்கு தனியாகத் தலைப்பு ஏதும் இல்லை.
————————————————————-
அடைபட்ட கூண்டில்
சிட்டுக்குருவியின் உற்சாகம்
எனது குழந்தைப் பருவம்

சின்னச் சிகப்பு பறவை
எனக்காகவே கூவியது
அதன் சிறகு உதிர்ந்தது

கோவில் வாசலில்
அமைதியான குளம்
காற்றில் அதிர்ந்தபடி

பரபரப்பான தேனீ
ரோஜாவைச் சுற்றியது
ஒளியில் ஒளிர்ந்தது

காட்டுவெளி எல்லையில்
சந்தோஷ ஆடு
கொளுத்தும் சூரியன்.

இரும்புக் கதவருகே
நாய் சோதிக்கும்
நிழலின் எதிரொலிப்பை

மெல்லிய மழையிலும்
சூரியனைத் தொடரும்
சூரியகாந்தியின் பார்வை

படித்த கவிதைகள்
வீட்டுச் சுவரில்
தோற்றுவிக்கும் உருவங்கள்

மங்கியநேர மணியோசை
நினைவில் வாழ்வதிர்வு
காற்றில் மண்வாசனை

நீலப்பச்சைத் தும்பி
நட்பாக அருகில்
அன்பின் அதிர்வில்

குழந்தை பூ பறிப்பது
ஒரு கவிதைத் துணுக்கு
விளக்கம் தேவையில்லை

கோயில் வாசலில்
வெயிலில் அலைந்த
குழந்தை ரிப்பன்

மழைக்கு ஒதுங்கிய
அனாதைக் குழந்தைக்கு
வேறு நோக்கமில்லை

மின்னல் வெளிச்சத்தில்
ஒளிர்ந்த தென்னையோலை
நிலவிற்கு முன்

தாவும் வெண்மேகம்
பாயும் காற்றில்
குழந்தையின் புன்னகையோடு

கண்ணகியின் சிலை வேறுவிதம்
என் பார்வையின் கோணத்தில்
ஒரு கண் மூடினால்

உடைந்த சிலையின்
உள் அழகு
ஈரத்தில் வெளியழகு

சின்ன நாய்க்குட்டி
தப்பிப் பாயும்
தருணத்தின் அழகு

தென்னந்தோப்பில் சிரிப்பொலி
காற்றில் பரவும்
எல்லா திசையிலும்

அழுக்குக் குள மூலையில்
தாவும் தவளைக்கு எதிரே
பரவும் சிறு அலைகள்

பணக்கார வீடு
ஒரு பொருட்டல்ல
சுற்றுலா பயணிக்கு

நிழலில் ஒதுங்கும் ஆமை
முதுகு ஓட்டினை மறந்து
எனது கனவு போல

மாலை மங்கும் இரவிற்கு
மறைவில் காத்திருந்த தவளை
தப்பும் பருந்துப் பார்வையில்

இன்றிரவு இந்த நகரம்
நேரம் துரத்தும் காலம்
நிலவு செல்லும் வேகம்

இலக்கில்லாக் காட்டு நாயை
தொடரும் கிழட்டு நரி
ரத்தச் சுவை கற்பனையில்

வரண்ட வயல் எல்லையில்
பசித்த மனிதன் பார்வையில்
சில காசுகள் ஈரமாய் தரையில்

பழைய பாலத்தின் கீழே
காய்ந்த இலை உதிரும்
பனி அடர்த்தியில் தயங்கிபடி

இளமையான தெரு நடனக்காரி
கோடையில் மழைக்கு வேண்டியபடி
உருக்கமாய் எல்லோருக்கும் பொதுவாக


புகழ் பெற்ற ஜென் கதை

ஜூலை 22, 2007

மலை உச்சியில் ஒருவன் நின்று கொண்டிருந்தான்.

மலையின் கீழிருந்து மூன்று பேர் அவனைப் பார்த்தனர்.

மூவரில் ஒருவன் சொன்னான், “மலை மேல் நிற்பவன் யாருக்கோ காத்துக் கொண்டிருக்கிறான்”.

மற்ற இருவர் அவன் பேச்சை மறுத்தனர்.

மூவரில் இரண்டாமவன் சொன்னான், “யாருக்கோ காத்திருப்பவன், அந்த யாரோ வருகிறாரா என்று திரும்பிப் பார்த்த வண்ணம் நிற்க வேண்டும். ஆனால், மலை மேல் நிற்பவன் அப்படிச் செய்யவில்லை. எனவே, அவன் யாருக்கோ காத்திருக்கவில்லை. அவன் எதையோ தேட அங்கே வந்து நிற்கிறான்” என்றான்.

இரண்டாமவன் பேச்சும் ஏற்கப்படவில்லை.

மூவரில் மூன்றாமவன் சொன்னான், ” எதையோ தேடுபவன், ஆணி அடித்தாமாதிரி நின்று கொண்டிருக்க மாட்டான், அங்கே, இங்கே திரும்பிப் பார்த்தபடி தேடும் பாவனையில் இருப்பான். இவன் தியானம் செய்து கொண்டிருக்கிறான்”. என்றான்.

இந்த பதிலும் திருப்தி தரவில்லை. எனவே, அவர்கள் மலை மேல் ஏறிச் சென்று நின்றுகொண்டிருப்பவனிடமே கேட்டுவிடலாம் என முடிவு செய்து மலை மேல் ஏறி நிற்பவன் அருகில் சென்றனர்.

மலை மேல் நிற்பவனிடம், “நீங்கள் யாருக்கோ காத்திருக்கிறீர்களா ? என்று கேட்டனர்.

அவன் இல்லை என்றான்.

“நீங்கள் எதையோ தொலைத்துவிட்டு, அதைத் தேடுகிறீர்களா? என்று கேட்டனர்.

அவன் அதற்கும் இல்லை என்றான்.

கடைசியாக, “நீங்கள் இங்கே தனிமையில் நின்றபடி தியானம் செய்கிறீர்களா?” என்று கேட்டனர்.

அதற்குக்கூட, மலை மேல் நின்று கொண்டிருந்தவனிடம் இல்லை என்று தான் பதில் வந்தது.

பின் இங்கே என்ன தான் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று மூவரும் கேட்டனர்.

அதற்கு அவன், ” நான் இங்கே நின்று கொண்டிருக்கிறேன்” என்றான்.


மறைவு

ஜூலை 7, 2007

காட்டு வெளியில்
பறவையின் கூடு
ஒளிவுமறைவின்றி


காற்று

ஜூலை 1, 2007

a4.jpg

சிறிய மலர்
காற்றில் ஓடியாடும்
மெல்ல வாடும்

காற்றால் மட்டுமே
தூக்கி வீசப்படும்
மலர்கள் நிறைந்த
இப்பழைய கோயிலில்

குழந்தைகளின் குதூகலக் குரல்
வெடித்துப் பரவும்
இலக்கில்லாமல்
எல்லா திசையிலும்
உன் வாசம் போல

இருளில் காத்திருக்கிறேன்
எப்போது வருவாய்
என் சிறிய மலரே



சுவாரசியம்

ஜூன் 27, 2007

“நான் சொன்னேன்…” என்று சொல்லியபடியே தொடர்ந்தது சிங்கம், நான் சொன்னேன்…, என்ன சொன்னேன்? என்று கேட்டது.

ராஜா ! நீங்கள் உங்களைப் பற்றித் தான் சொல்லிக் கொண்டிருந்தீர்கள் என்றது நரி பவ்யமாக.

ஆமாம். எனக்குத் தெரியும். நான் ஒரு சுவாரசியமான விஷயத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும் போது, மிகவும் மூர்க்கமாக என் பேச்சு குறுக்கிடப்பட்டது என்றது.மேலும், என்னைப்பற்றிச் சொன்னேன் என்று ஏன் சொல்கிறாய் என்றது.

நீங்கள் எது பேசினாலும் எங்களுக்கு அது சுவாரசியம். ஏன் பிரித்துப் பேசுகிறீர்கள் ? என்றது நரி.


நீங்கள் ‘ஒஷோ’ ரசிகரா ?

ஜூன் 24, 2007

நீங்கள் ‘ஒஷோ’ ரசிகரா ? அப்படியென்றால் உங்களுக்கு ஒரு விருந்து இப்பதிவில் காத்திருக்கிறது.

ராஜ்மிட்டல் என்ற ஒரு ஹரியானா இளைஞர், ஓஷோ அவர்களின் பல புத்தகங்களை பிடிஎப் வடிவில் மென்னூலாக வலைப்பதிவில் பதிந்திருக்கிறார்.

நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் !!!

மேலும், புத்த மதம் பற்றியும், விவேகானந்தர் பற்றியும் பல புத்தகங்கள் இங்கு உண்டு. அவருக்கு என் நன்றியும் அன்பும்.

அவரது வலைப்பூ முகவரி : http://rajmittal.com/blog/osho.htm.

அங்க போய் அள்ளுங்க :-)

மேலும், இங்கே ஒஷோவின் பேச்சுக்கள் ஒலிப்பதிவாக தகவலிறக்க வசதியுடன் உள்ளது. இதுவும் ஒரு அருமையான இணையத் தளம். டவுன்லோட் என்ற இணைப்பை இந்த வலைத்தளத்திற்குச் சென்று அழுத்தவும். இங்கே
வைர சூத்திரம் முழுவதும் அவரது குரலில் கேட்கலாம் எம்பி3 வடிவில்.

இணைய முகவரி: http://www.sannyasworld.com/

குருவின் சக்தி என்பது உனது ‘கற்பனை சக்தி’ என்று சொன்ன ஒஷோ ஒரு முக்கியமானவர்.

The power of the guru is nothing but the power of your imagination, and the real guru will make you alert about and aware of your own power. – osho


திருப்திக்கு மிக அருகில்

ஜூன் 20, 2007

நான் இன்று குழந்தைகளிடம் சென்றேன்
ஏன் என்று கேட்டால்
என்னிடம் ஒரு பதில் இல்லை

நான் இன்று குழந்தைகளிடம் கற்றேன்
என்ன என்று கேட்டால்
என்னிடம் ஒரு பதில் உண்டு

என் கேள்வி என் சந்தேகத்திற்கு
மிக அருகில் இருந்தால்
நான் திருப்திக்கு மிக அருகில்


கதைச்சொல்லியும், கதையும்

ஜூன் 17, 2007

கதை சொல்லும் பழக்கம் உண்டா ? / கதை கேட்கும் பழக்கம் உண்டா ? என நான் என் நண்பர்களைக் கேட்பதுண்டு. இக்கேள்விக்குக் கிடைக்கும் பதில்கள் கதை என்பதன் பொருள் இன்று எவ்வாறு புரிந்து கொள்ளப்படுகிறது என்ற வியப்பு எனக்கு ஏற்ப்பட்டது.

கதை என்ற சொல்லுக்கு நிகழ்ச்சி, செய்தி, நிகழ்ச்சி விபரம், விரிவுரை, விளக்கம், சென்ற கால வரலாறு, தோற்ற வளர்ச்சி விபரம், பத்திரிகைச் செய்தி, பத்திரிகைக் கட்டுரை, வாய்மொழிக் கூற்று, நம்ப முடியாதச் செய்தி, காலம் கடந்த செய்தி, கட்டுக்கதை, பொய், சுருக்கிக் கூறுவதானால் விவரங்களை விட்டு விட்டுக் குறிப்பாகப் புலப்படுத்துவது எனப் பல பொருள் இன்று உண்டு.

கதைச் சொல்லுபவர்களுக்குக் கதை கூறுவோர், கதைஞர், கதை எழுத்தாளர், கதாசிரியர், கதையளப்பவர், குழந்தை வழக்கில் பொய்யர், புளுகர் எனவும் பல பொருள் உண்டு.

ஒரு ‘கதைச்சொல்லி’, ‘கதை’ என்பதற்கு பயன்படுத்தும் கட்டமைப்பு பொதுவாகப் பின் வரும் நான்கு நிலைகளில் அமையும்.

1. நிகழ்ச்சி

2. இரண்டு வழிகளில் ஒன்றைத் தேர்வு செய்யவேண்டிய நிலை

3. விளைவாக உண்டான செயல் (காரண காரியத் தொடர்பு)

4. பலன். (உள்ளார்ந்த அல்லது வெளிப்படையான)

ஒரு நல்ல கதைச்சொல்லியை இனம் காண என் மனதில் தோன்றும் சில கேள்விகள்.

1. கதையின் பரிமாணம் என்ன ?
2. மாற்றம் என்பது கதையில் எங்கு எவ்விதம் சொல்லப்படுகிறது ?
3. தற்போதைய சூழ்நிலைக்கு இக்கதை எவ்விதம் பொருந்துகிறது ?
4. கதைச்சொல்லியின் நாக்கு இக்கதையைச் சொல்ல முடிவெடுத்தது எப்படி ?
5. இக்கதை கதைச்சொல்லியால் ஏன் இப்படிச் சொல்லப்படுகிறது ?
6. கதைச்சொல்லியின் புலனுணர்வு கதையில் வெளிப்படுகிறதா ?

கதை பொதுவாக கதை கேட்பவரின் வாழ்க்கைச் சூழ்நிலைகளை விவரித்துச் சொல்லப்படும் காலம் என்ன என்பதை உணர வைப்பது. கதை என்பது வாழும் காலத்தின் கலாச்சார சூழ்நிலைகளின் பிரதிபலிப்பு என்றும் சொல்லப்படுவதுண்டு.

ஒரு கருத்தாழமிக்க கதையைச் சொல்லிக் கதை கேட்போரைக் கவர்வது என்பது கதை சொல்பவர் உணர்ந்த தீர்வையும், முடிவையும், கதை கேட்பவரும் அதே அலைவரிசையில் உணரவைப்பதும், கதை கேட்பவரை அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று செயலாற்றத் தூண்டும் சக்தி படைப்பதில் உள்ளது என்பேன்.

கம்ப்யூட்டரில் ஃபிளாஷ் / பவர் பாயிண்ட் பயன்படுத்திக் கதை சொல்லும் உத்தி எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. சிறிய ஃபிளாஷ் வடிவில் தேர்ந்த ஒலி நயத்துடன் உருவாக்கப்பட்ட கதைகள் இணையத்தில் எங்காவது உண்டா ?

‘கதைச்சொல்லி’ கதையை வாய்விட்டுச் சொல்வதும், அதனைக் கேட்பவர் உடனே அதற்கு எதிர்வினையாற்றும்படியாக ஒரு சூழலும் இன்று இல்லை. அந்த வாய்ப்பு ஏன் குழந்தைகளுக்கு மட்டும் உள்ளது ?

நான் என் சிறு வயதில் வரலாறு பாடத்தில் வந்த ஒரு நிகழ்ச்சிக்குக் கேட்ட கேள்வி இன்றும் நினைவில் உள்ளது. அசோகர் குளம் வெட்டினார், சாலையோரம் மரம் நட்டார் என்று வாய்விட்டுச் சொல்லிக் கொடுத்த ஆசிரியரிடம், குளம் வெட்டட்டும், மரம் நடட்டும் அதுக்கென்ன வந்தது ? இதிலென்ன விசேஷம் ? என்று கேட்ட கேள்விக்குப் புரியும்படியாகச் சரியான பதில் கிடைக்கவில்லை. அச்செயலுக்குப் பின் உள்ள பொருள் ஒன்றல்ல பல.

இன்று கதை என்பது ஒலி/ஒளிபரப்பு மூலமாக, மென் நூல்/புத்தக வடிவில் வாசிக்க, இணையத்தளங்கள் மூலமாக என கேட்பவரின் பங்களிப்பு என்பதை பின் நகர்த்தி, சொல்ல வந்ததைச் சொல்லிவிட்டுப் போவதும், புரிந்து கொள் அல்லது தலையைச் சொரிந்து கொள் என்று பல நிலைகளியில் உள்ளது.

நாம் கதைகள் சூழ்ந்த உலகில் வாழ்கிறோம். மறக்க முடியாத கதைகள் என்பது நம் வாழ்நாள் முழுவதும் நம் நினைவில் நீச்சல் அடிப்பவை. கதைகள் நாம் வாழும் சமூகத்தை நாம் அறிந்த அறிவிற்கு ஏற்றபடி புரிந்துகொள்ள உதவுபவை. நாம் கதைகளை முடிவெடுக்கவும், சண்டைச் சச்சரவிலிருந்து விடுபடுவதற்கும், வழிகாட்டுதலுக்கும் மேலும் சில தகவல்களை அறியவும் பயன்படுத்திக்கொள்கிறோம்.

‘கற்பனையைத் தூண்டுவது’ என்று கதைப் பற்றிக் சொல்வதைக் கேட்டு நான் யோசிப்பதுண்டு. கற்பனையைத் தூண்டி கனவுலகில் சஞ்சரிக்க ஒரு கதை உதவினால், அக்கற்பனை என்பது நல்ல கனவுகளை ஏற்படுத்தினால், அக்கனவு நல்ல செயலையும், அச்செயல் நல்ல விளைவுகளையும் ஏற்படுத்த வாய்ப்பு உண்டு. கெட்ட கனவும் ஏற்பட்டு தீமைகள் பலவும் நிகழ்வது யதார்த்தமான ஒரு உண்மை.

எனக்கு ஒரு கதை என்பதை எப்போது(மே) எப்படி சிறப்பாகப் பயன்படுத்த முடியும், மேலும், ஏன் அவ்வாறு செய்ய முடிவதில்லை என்ற கேள்வி உண்டு.

கதைகள் சொல்லும் நீதி என்பது சிலவற்றில் வெளிப்படை. பலவற்றில் உள்ளர்த்தம். மேலும் பலவற்றில் இல்லவேயில்லை என்றும் சொல்லலாம்.

இந்தச் சூழலில் எந்தவிதமானக் கதையைக் ‘கதைச்சொல்லி’ சொல்ல வேண்டும் என்று கேட்டால், அது கதை கேட்பவரின் தகுதியைப் பார்த்து சொல்லாம் என்ற பதில் வரும்.

சொல்லப்பட்டக் கதையை ஒரு நபர் புரிந்து கொண்டு பயன் அடைவதற்கும், அக்கதையால் கேட்பவர்க்கு ஒரு பயனும் இல்லாமல் போவதற்கும் சரிசமமான வாய்ப்பு உண்டு.

ஒருவர் நல்லவரா அல்லது கெட்டவரா ?
வாழ்க்கைப் பற்றிய எந்தவித மதிப்பீடுகள் ஒருவரை உயர்த்தும்?
எனது இச்செயல் எனக்கு நற்பெயர் தருமா அல்லது கெட்ட பெயர் தருமா?
எனது தவறுகளுக்கு என்னால் பாதிக்கப்பட்டவரின் எதிர்வினை என்பது எப்படியிருக்கும் ?
மேலும் அதற்கு நான் என்ன செய்வது ?

போன்ற கேள்விகளுக்கு விடை தேட நான் கதை கேட்பதுண்டு.

எனக்குக் கதை சொல்லும் கதைச்சொல்லிகள், என்ன நடந்தது என்று மட்டும் சொல்லிவிட்டு என்ன செய்யலாம் என்பதை விவாதத்திற்கு விடும் காலம் ஒரு சவாலான இடம்.

நல்ல ‘கதைச்சொல்லியை’ இனம் காண்பது சற்று கடினம். நல்ல கதைச்சொல்லியும் கதையும் அமைவது நம் கையில் தான் உள்ளது. கதைச்சொல்லி என்பவர் நம்மைவிட வயதில் சிறியவரக இருக்கலாம், பல விதத்தில் நமக்கு இணையானவராக இல்லாமல் இருக்கலாம் ஆனால். அவரிடம் உள்ள கதையைச் சொல்ல வைக்கும் ஆற்றல் நம்மிடம் மட்டுமே உண்டு. அவராக வந்துச் சொல்வது என்பது இன்றைய காலத்தில் நடவாத காரியம்.


ஆசை

ஜூன் 10, 2007

காகத்திற்கு குயில் போல பிறந்து வாழ வேண்டும் என்று ஆசை வந்துவிட்டது. அது இறைவனை தினமும் மறுபிறப்பு என்பது தனக்கு குயிலாக வேண்டும் என்று வேண்டிக்கொண்டது.

ஒரு நாள் காகம் இறந்துபோனது.

அதன் மறுபிறப்பு மறுபடியும் காகமாகவே அமைந்துவிட்டது.

கோபம் கொண்ட காகம் இறைவனை நோக்கிக் கேள்வி எழுப்பியது.

” எனக்கு ஏன் இப்படி? நான் எனது விருப்பத்தை உனக்கு தினமும் தெரிவிக்கவில்லையா?”

இறைவன் சொன்னார், ” வேப்பம்பழம் மீது ஆசை வைத்தால் காகமாகப் பிறக்கவேண்டியது தான்.” குயிலாகப் பிறக்கவேண்டும் என்றால் மாம்பழம் மீது ஆசை வைக்க வேண்டும். வேப்பம்பழம் கூடாது”

மேலும் சொன்னார், ” மலம் தின்னும் பன்றி யானையாகப் பிறக்க ஆசைப்பட்டால், கரும்பு தின்ன ஆசைப்பட வேண்டும்”


ஏனென்றால்…

மே 29, 2007

பயந்து கண்மூடினேன்
சூரிய ஒளிக்கு
கிழிந்த புகைப்படம்
மிதக்கும்
தங்க நீர்வீழ்ச்சியில்
அலையும் மேலெழும்பும்
காற்றுவெளியில்
கண் திறந்தேன்
மலையுச்சி விளிம்பில்
வாழ்வின் கனவுணர்ந்து.


பொறி

மே 28, 2007

நீரோடையில் தூண்டில்
ஆசையில் மீன்
திறந்தது வாய்
ஏற்கனவே பறிபோனது
உயிர்


எனது குடுவையில் நிரம்பிய கவிதை வரிகள்

மே 27, 2007

ஏற்கனவே சுவற்றில் எழுதிவைத்த
தெரிந்த மேற்கோள்கள் போல
நிலவொளியில் நான் தவறி விழுந்தேன்

ஃபிராய்டின் கனவுலக மொழிபெயர்ப்பு
நான் பேசும் கடந்தகால மொழிபெயர்ப்பு

என் கனவைப் பகிர்ந்து கொள்வேன்
என் கனவு என்பது விளங்கும்வரை

ஓசையில்லாமல் மகிழ்ச்சியை மட்டும் விவரிக்கும்
என் கனவை நிரூபிக்க என்னிடம் ஏதும் இல்லை

என் கனவு என்பது உன்னைத் தொடும்
நீ உன்னைத் தொடுவது போலவே
மறக்க முடியாதபடிக்கு


எண்ணங்களாகிய காடு

மே 25, 2007

சில எண்ணங்கள் வலிமையுடையவையாகத் தோன்றுவது ஏன் ? அவைகளுக்கு உள்ள வலிமையினாலா ? அல்லது நான் அவற்றைத் தொடர்ந்து நினைப்பதால், கவனிப்பதால் அவை வலிமை பெறுகின்றனவா ?

எண்ணங்களின் பிடியிலிருந்து மனதை நீக்கி ஒரு நிலையில் வைக்க இக்கேள்வியால் ஏதேனும் பயன் உண்டா?

சிதறிப்போன வலிமையற்ற மனதில் தொடங்கி, ஒன்றோடு தொடர்பு கொள்ளுதல் என வாழ்க்கையில் எல்லா நிலைகளிலும் முடிவுறாத் தேவையாகத் தொடர்வது ஓர் அறுபடாத தொடர் உறவு.


தருணம்

மே 24, 2007

எனது இத்தருணம்
என் விழிப்புணர்வால்
தழுவப்படட்டும்
அத்தழுவல்
சொற்களால் அல்ல

எனக்குக் கிடைக்கும்
உதவியாக
எனக்கு அளித்த பரிசு
எனது இத்தருணம்

கைகளால் பிடிக்கமுடியாத
வழுவழுப்பான
பட்டுத்துணி போல
என் கைவிட்டு
நழுவும்
எனது இத்தருணம்

என் நினைவில்
சிறகடித்துத்
துள்ளி மறையும்
எனது இத்தருணம்

எனது இத்தருணம்
என் சொற்களால்
தழுவப்படட்டும்
அத்தழுவல்
விழிப்புணர்வால் அல்ல


வாழ்க்கைப் பாடல்

மே 20, 2007

எண்ணம் எழாத விழிப்பு நிலை அடையப்பட்டதா ?
மீண்டும் முளைக்காதபடி வாசனைகள் வறுக்கப்பட்டனவா ?
கர்ம-பலன் அடையாத சகஜ நிலை வந்து விட்டதா ?
மனிதப் பிறவியின் நோக்கம் நிறைவேறியதா ?

- ஸ்ரீ சாது ஓம் ( ரமண கீதம்)


மானம்

மே 19, 2007

சேரமான் கணைக்கால் இரும்பொறை சோழன் கோச்செங்கணான் என்ற சோழ மன்னனிடம் போரில் சிறைப்பட்டு குடவாயில் என்னும் ஊரில் சிறை வைக்கப்பட்டான். சிறையில் அவனுக்குத் தண்ணீர் தாகம் எடுத்தது. தண்ணீர் கேட்டான். காவலன் சற்றே காலம் தாழ்த்தி தண்ணீர் கொண்டு வந்து தந்தான்.

கொண்டு வந்து தந்த தண்ணீரைக் குடிக்காமல் உயிர்விட்டான் அந்த மன்னன்.
மனம் பொறுக்காத மன்னன் இறக்கும்போது ஒரு பாடல் எழுதிவைத்துவிட்டு மாண்டான்.

அவன் எழுதிய பாடல்

“குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும்
ஆளன்று என்று வாளில் தப்பார்”

பொருள்:
குழந்தை இறந்து பிறந்தாலும், உருவம் இல்லாமல் சதைப் பிண்டமாக பிறந்தாலும் வாளால் கீறியே அதைப் புதைப்பார்கள். நான் போரில் சாகாமல், சிறையில் இருப்பதால் சிறைக்காவலன் கூட என்னை மதிக்கவில்லை என்பது சொல்லாத பொருள்.


ஆண்டவன் கட்டளை

மே 19, 2007

ஆறு மனமே ஆறு
இந்த ஆண்டவன் கட்டளை ஆறு
சேர்ந்து மனிதன் வாழும் வகைக்குத் தெய்வத்தின் கட்டளை ஆறு

கட்டளைகள் 1 & 2.

கொடுக்கும் விலை
1. ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார்

கிடைக்கும் நிலை
உள்ளத்தில் உள்ளது அமைதி

உவமை
இதில் சொல்லுக்கு செய்கை பொன்னாகும்

கொடுக்கும் விலை
2. இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம்

கிடைக்கும் நிலை
இறைவன் வகுத்த நியதி

உவமை
வரும் துன்பத்தில் இன்பம் பட்டாகும்

நன்மை (கட்டளைகள் 1 & 2.)
இந்த இரண்டு கட்டளை அறிந்த மனதில் எல்லா நன்மையும் உண்டாகும்

கட்டளைகள் 3 & 4.

கொடுக்கும் விலை
3. உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால்

கிடைக்கும் நிலை
உலகம் உன்னிடம் மயங்கும்

உவமை
இதில் உண்மை என்பது அன்பாகும்

கொடுக்கும் விலை
4. நிலை உயரும் போது பணிவு கொண்டால்

கிடைக்கும் நிலை
உயிர்கள் உன்னை வணங்கும்

உவமை
பெரும் பணிவு என்பது பண்பாகும்

நன்மை (கட்டளைகள் 3 & 4.)
இந்த நான்கு கட்டளை அறிந்த மனதில் எல்லா நன்மையும் உண்டாகும்

கட்டளைகள் 5 & 6.
கொடுக்கும் விலை
5. ஆசை கோபம் களவு கொண்டவன்

கிடைக்கும் நிலை
பேசத் தெரிந்த மிருகம்

உவமை
இதில் மிருகம் என்பது கள்ள மனம்

கொடுக்கும் விலை
6. அன்பு நன்றி கருணை கொண்டவன்

கிடைக்கும் நிலை
மனித வடிவில் தெய்வம்

உவமை
உயர் தெய்வம் என்பது பிள்ளை மனம்

நன்மை (கட்டளைகள் 5 & 6.)
இந்த ஆறு கட்டளை அறிந்த மனது ஆண்டவன் வாழும் வெள்ளை மனம்


மறதி

மே 19, 2007

மறதியால் இன்று அலைச்சல் ஏற்பட்டது.
என் மறதிக்கு எனக்குத் தெரிந்த காரணங்கள்.

1. அலட்சியம்
2. வேலைச் சுமை
3. கவலை
4. திட்டமிடாமை.

பாவேந்தர் பாரதிதாசனின் பாடல் ஒன்று வெளியூர் பயணம் செய்வோர் மனப்பாடம் செய்து கொண்டு பயனடைவதாக உள்ளது.

சீப்புக் கண்ணாடி ஆடை சிறுகத்தி கூந்தல் எண்ணெய்
சோப்பு பாட்டரி விளக்குத் தூக்கு கூஜா தாள் பென்சில்
தீப்பெட்டி கவிகை சால்வை செறுப்புக் கோவணம் படுக்கை
காப்பிட்டப் பெட்டி ரூபாய் கைகொள்க யாத்திரைக்கே

இன்று பயணம் செய்வோர் எடுத்துச் செல்லும் பொருள் இதில் எவ்வளவு என்பது பாத்தால் அவை மிகவும் குறைவாக, பலது இல்லாமல், வேறு பொருள்கள் அந்த இடத்தில் இடம் மாறியுள்ளது எனக்கு வியப்பு.

இன்று பயணம் செய்வோர் பயணிக்க ஈ-டிக்கெட் மற்றும் அதன் அத்தாட்சி, செல்போன் சார்ஜர், க்ரெடிட்/டெபிட் கார்டு என்று பல புதியதாக இன்று இடம் பெற்றுவிட்டன.

பாட்டரி விளக்கு, தூக்கு கூஜா, தாள் பென்சில் தீப்பெட்டி கோவணம் (?!) முதலியவை பயணத்துக்குத் தேவையா என்ன ?


பிறர்க்கு உதவுவது

மே 19, 2007

வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு வகையான துன்பம்.
மகனை இழந்த பெரும் சோகம்.
பணத்தை இழந்த பெரும் துன்பம்.
மனைவியை இழந்து விட்ட துன்பம்.
கணவனை இழந்த துயரம்.
தாய் தந்தையை இழந்த அனாதையின் உள்ளம்.
பெரிய விபத்தில் எல்லோரையும் இழந்த பெண் ஒருவளின் துயரம்.

இன்னும் பல வாழ்க்கையில் இருந்தாலும் வாழ்க்கையை வாழ வேண்டிய யதார்த்தம்.
என்ன செய்வது? எப்படி வாழ்வது என்று சிந்திக்கும் போது துன்பப்பட்டவரின் உள்ளத்தில் தோன்றும் ஒளிக்கீற்று தான் “பிறர்க்கு உதவுவது”.

அதுவரை இந்த சொற்றொடரின் பொருள் யாருக்கும் விளங்காது.

வாழ்க்கையை அர்த்தம் நிறைந்ததாக மாற்றும் சக்தி இந்த செயலுக்கு மட்டுமே உண்டு.


வினா விடை

மே 19, 2007

வினாவும் விடையும்.

கே.பி.சுந்தராம்பாளின் கணவர் எஸ்.ஜி.கிட்டப்பா (நடிகர் மற்றும் பாடகர்) ஒரு முறை நீதிமன்றத்தில் சாட்சி சொல்ல வேண்டிய நிலை. எதிர் வக்கீல் கிட்டப்பாவிடம் குறுக்கு விசாரணையில் கேட்ட கேள்விகளும், கிட்டப்பாவின் பதிலும்.

“நீங்க என்ன தொழில் செய்கிறீர்கள்?”

“நாடகங்களில் நடித்து வருகிறேன்”

“கூத்தாடும் கேவலமான பிழைப்பா?”

“ஆமாம். ஆனா எங்க அப்பா செஞ்ச தொழிலுக்கு இது தேவலை.”

அவர் என்ன செஞ்சார்?”

:வேணாம், அதச் சொல்ல முடியாது. அது கேவலத்திலும் கேவலமான தொழில்.

பரவாயில்ல. அது என்னனு சொல்லுங்க.

வக்கீல் தொழில் செஞ்சாரு.

***
பழைய மாணவர் ஒருவர் தம் ஆசிரியரைச் சந்தித்தார்.

மாணவர், ‘ஐயா, நான் உங்ககிட்டப் படிச்சிருக்கேன், எனக்குத் தமிழ் வாத்தியார் நீங்க தான்” என்றார்.

ஆசிரியர், ”ழ வராம அடிக்கடி என் கிட்ட உதை வாங்குவியே, அந்தப் பையன் தான் நீ?”

மாணவர், ‘ஆமாம், இப்ப நல்லா ழ வருது. நீங்க முந்தியெல்லாம் பசங்களக் கூப்பிட்டு வீட்டு வேலையெல்லாம் வாங்குவீங்களே, இப்பவும் அப்படித்தானா?”

*****=
அம்மா, படித்துக் கொண்டிருக்கும் மகனிடம் “டேய், கடைக்குபோய் வெண்டைக்காய், தக்காளி வாங்கிட்டுவாடா சமையலுக்கு”
அப்பா, ” என்ன ஐயேயெஸ்ஸுக்கா படிக்கிற? போய் வாங்கிட்டு வந்து படியேண்டா?”
மகன், ” நீங்க என்ன பேப்பர் படிச்சுட்டு சட்டசபையில போய் பதில் சொல்லவா போறிங்க?”


நாளை வரும் என்று நம்பலாமா ?

மே 19, 2007

சுதா ரகுநாதன் பாடிய மானசப் பொய்கையிலே … என்ற தொகுப்பில் உள்ள நாளை வரும் என்று நம்பலாமா ?
என்ற பாடலைக் கேட்டவர்கள் யாராவது உண்டா ?. இப்பாடலைக் கேட்ட உடன் என் மனம் அடைந்த உணர்வுகளை வார்த்தையில் எழுத முடியாது என்று தோன்றினாலும், இது ஒரு பகிர முடியாத உன்னத அனுபவம் என்று மட்டும் என்னால் சொல்ல முடியும். பொதுவாகவே முருகன் பாடல்கள் என்பது மனதை உலுக்கி விடும் இயல்பாக அமைவது எனக்கு ஒரு வியப்பு. உதாரணமாக, பல பாடல்கள் என்னால் சொல்ல முடியும்.

என் அவதானிப்பு இப்படியாக

1. பாதிமதினதி – கே.ஜே .ஜேசுதாஸ் பாடியது – தரங்கிணி வெளியீடு (லைவ் கான்ஸர்ட் வால்யூம் -4)

2. பக்தியால் யான் உனைப் பல காலம் – கே.ஜே .ஜேசுதாஸ் பாடியது – தரங்கிணி வெளியீடு (லைவ் கான்ஸர்ட் வால்யூம் -4)

3. குறிஞ்சி நிலத் தெய்வம் முருகனே – கே.ஜே .ஜேசுதாஸ் பாடியது – தரங்கிணி வெளியீடு ( முருகன் பாடல்கள்)

இப்பாடல்கள் எழுதியவர், பாடியவர், ராகம், பின்ணணி இசை, ஒலிப்பதிவு என்று பல அம்சங்கள் சேர்ந்த ஒன்று.

கந்த சஷ்டிக் கவசம் பாடலின் உக்கிரகம் அதைக் கேட்டவர்களுக்கு நன்கு தெரியும். ( நான் கேட்டது சூலமங்கம் சகோதரிகள் பாடியது)

அதே வரிசையில் சண்முக கவசமும் நான் பல முறை (சஷ்டி கவசத்தை விட) திரும்பத் திரும்பக் கேட்கும் ஒரு ஒரு ஒலி வடிவம். ( சீர்காழி கோவிந்த ராஜன் பாடியது)

இப்படியாகச் சில பாடல்கள் மூலம் நான் முருகன் பாடல்கள் பற்றிய ஒரு அபிப்பிராயமும், விருப்பமும் கொண்டிருந்தேன்.

சுதா ரகுநாதன் பாடிய பாடலினை எழுத்து வடிவில் இங்கு பதிந்துள்ளேன். இப்பாடலில் வரும் “மனமுருகி” என்ற சொற்பிரயோகம் சுதா ரகுநாதனால் பல விதங்களில் ஏற்ற இறக்கத்துடன் பாடப்பட்டது கேட்பவர் மனம் உருகிவிடும் சக்தி படைத்தது.

நாளை வரும் என்று நம்பலாமா ? (2)
குகன் தாளைப் பணிந்தருள் பெற வேண்டாமா?

நாளை வரும் என்று நம்பலாமா ?
குகன் தாளைப் பணிந்தருள் பெற வேண்டாமா?

நாளை வரும் என்று நம்பலாமா ?

வேலைப் பிடித்தக் கந்தவேளை மனமுருகி(4)
காலை மாலை இரு வேளையும் துதிக்காமல்(2)
நாளை வரும் என்று நம்பலாமா ?
குகன் தாளைப் பணிந்தருள் பெற வேண்டாமா?
நாளை வரும் என்று நம்பலாமா ?

அழகான வாலிபம் அணங்குடனே தீரும் (2)
திரண்டுவரும் நேரம் கவலை பல சூழும் (2)
அழகான வாலிபம் அணங்குடனே தீரும்
திரண்டுவரும் நேரம் கவலை பல சூழும்

திருமுருகன் நாமம்
நாமம்
திருமுருகன் நாமம் நினைக்க நேரமில்லை (2)
மறுபிறவி என்பது எங்கோ தெரியவில்லை (2)
நாளை வரும் என்று நம்பலாமா ?
குகன் தாளைப் பணிந்தருள் பெற வேண்டாமா?
நாளை வரும் என்று நம்பலாமா ?

நம்பலாமா ? நம்பலாமா ?

இப்பாடல் தொகுப்பில் உள்ள மற்ற பாடல்களில் வேறு சில பாடல்களும் வார்த்தைகளால் விவரிக்க இயலாத தன்மையுடைய சிறப்புடையவை.

1. அபிராமி அந்தாதியின் தனம் தரும் கல்வி வரும் எனத் துவங்கும் ஒரு அம்மன் பாடல்
2. மானசப் பொய்கையிலே
3. நாதர் முடி மேல் இருக்கும் நாகப் பாம்பே

CD Cover


ராஜாக் கதை

மே 15, 2007

இந்த ஞாயிறு எங்கள் பகுதி நகைச்சுவை மன்றத்திற்குப் போயிருந்தேன்.
வழக்க்ம் போல படித்த, பார்த்த மற்றும் கேட்ட ஜோக்குகளே உலா வந்து கொண்டிருந்தன. இதன் மத்தியில் ஒரு பெண் குழந்தை சுமார் 5 அல்லது 6 வயது தான் இருக்கும். மேடையேறி, ஜோக்கு சொல்ல ஆரம்பித்தாள்.
அவள் சொன்ன மொழியிலேயே இனி அந்த ஜோக்கு.

என் பெயர் பவித்ரா.
நான் உங்களுக்கு ஒரு ஜோக்கு இன்னைக்குச் சொல்லப் போறேன்.
(அமைதி சில வினாடிக்கு. அவள் முகத்தில் சிரிப்பு)

ஒரு நாள் மந்திரி ராஜாக்கிட்ட வந்து ….
(வாய் பொத்தி சிரிப்பு. மேலே பேச முடியவில்லை)

சில வினாடிக்குப் பிறகு,

ஒரு நாள் மந்திரி ராஜாக்கிட்ட வந்து ….
(மேலும் வாய்விட்டுச் சிரிப்பு. மேலே பேச முடியவில்லை)

அப்பெண் குழந்தையின் குதூகலம் மன்றத்தில் இருந்த எல்லோரையும் தொற்றிக் கொண்டு விட்டது. ஆளாளுக்குச் சிரிப்புடன், “சொல்லுமா, நாங்களும் கேட்டுச் சிரிப்போம்ல” என்று பேசத் துவங்கிவிட்டனர்.

அப்பெண்ணால் ஜோக்கு சொல்லவே முடியாத அளவிற்குச் சிரிப்பால் அவள் முகம் நிறைந்துவிட்டது.

மேலும், சில வினாடிகள் ஆசுவாசப்படுத்திக் கொண்டு, தீர்மானமான் முகத்துடன், ஆனால் சிரிப்பு கலையாமல் பேசச் துவங்கினாள்.

ஒரு நாள் மந்திரி ராஜாக்கிட்ட வந்து, “ராஜா, ராஜா, உங்களப் பார்க்கிறத்துக்கு ஒருத்தன் கிலோக் கணக்குல பேரிச்சம்பழம் வச்சிண்டு வாசல்ல நிக்கிறான்”. னு சொன்னார்.

அதுக்கு அந்த ராஜா, “மந்திரி, வாசல்ல போய் நாம கட்டி வச்சிருக்கிற ஆராய்ச்சி மணி இருக்கான்னு பார்த்துட்டு வா” அப்படின்னார்.

இந்த ஜோக்கு சொன்னதுக்குப் பிறகு மன்றத்தில் பரவிய சிரிப்பலை அடங்க வெகு நேரமாயிற்று.

எனக்கு இந்த ஜோக்கை விட அது சொல்லப்பட்ட விதம் மிகவும் கவர்ந்தது.

அப்பெண் குழந்தையைப் பாராட்டி, பேனா பரிசாகக் கொடுத்தாரர்கள்.

வீட்டுக்கு வந்து நான் திரும்பத் திரும்ப இந்த நிகழ்ச்சியையே யோசித்துக் கொண்டிருந்தேன்.

என் தாயார் என்னிடம் வந்து என்ன? வெளிய போய்ட்டுவந்து யோசனையா இருக்க ? என்று வினவினார்.

அவரிடம் இந்த ஜோக்கை அப்படியே நிகழ்ச்சி நடந்தபடிக்குச் சொன்னேன்.

அவருக்கு இந்த ஜோக்கு புரியவில்லை. இது எனக்கு வியப்பாக இருந்தது.

இது ஒரு சம்பவம். ஆனால் இதில் ஒரு நகைச்சுவை உள்ளது என்பது, மறைவாக உள்ளது.

என் தாயாருக்கு இரும்புக்குப் பேரீச்சம்பழம் தருவார்கள் என்பது தெரியும். இந்த நிகழ்ச்சியில் அதைச் சட்டென்று உடனே புரிந்து கொள்வதில் அவருக்கு இயலமுடியாமல் போயிற்று.

அவருடைய சிறு வயதில், அவரிடம் வந்து, இஸ்திரிக்கு என்று துணிகளை வாங்கிப் போனவன் திரும்ப வரவேயில்லை. பிறகு தான் தெரிந்தது, அவன் பிளாஸ்டிக் பொருள்களைப் பழைய துணிகளுக்கு விற்பவன் என்று.

இந்த நிகழ்ச்சி பல முறை எங்கள் வீட்டில் பேசப்பட்டதுண்டு. இதிலும் நகைச்சுவை உண்டு.

இதையே நகைச்சுவையாக, இஸ்திரிக்குக் துணி கேட்க வந்தவனிடம், “இதுக்கு என்ன கிடைக்கும், பக்கெட்டா, அல்லது டப்ப்ப்பா ஏதாவது தானா ? என்று கேட்டால், புரிந்து கொள்வது எப்படியோ அப்படியே தான் இந்த ஜோக்கும்.

உலகத்தில் உள்ள கதைகள் யாவும் மனதில் ஒளிந்துள்ளன.
மனம் விழிப்படைந்தால் தானாகவே, அக்கதைகள் வெளிவந்துவிடும்.


வாழ்க்கைச் சுவை

மே 13, 2007

ஓர் ஊரில் ஒரு வீட்டில் ஒரு கூண்டுக் கிளிக்குத் தினமும் உண்ண மிளகு கொடுத்து வந்தார்கள். அந்தக் கூண்டுக்கிளி காரமான மிளகைச் சகித்தபடி உண்டு வந்தது. ஒரு நாள் ஒரு வழிப்போக்கன் அக்கிளி மிளகு உண்பதைக் கண்டு வருந்தி, அதற்கு ஒரு கருப்பு திராட்சையை உண்ணக் கொடுத்தான்.

கிளி அப்பழத்தின் சுவையில் மயங்கி, அவனிடம் ” இது என்ன பெரிய மிளகு, தித்திப்பாக இருக்கே?” என்று வினவியது.

அதற்கு அவன், இதைவிடத் தித்திப்பான ஒன்று உண்டு. அது உனக்கு நினைவில் இல்லை. இப்போது பார் அந்த தித்திப்பின் சுவையை என்று கூறியபடியே அக்கிளியின் கூண்டுக்கதவினைத் திறந்து அக்கிளியை வெளியே பறக்க விட்டான்.

போன மாதம் பொதிகையில் காட்டப்பட்ட ஆதிசங்கரர் திரைப்படத்தில் வந்த ஒரு காட்சி.


நாம இனிமே . . .

மே 13, 2007

ஒரு நத்தை மெள்ள நடந்து வந்து கொண்டிருந்தது. அது வரும் பாதையில் ஒரு பெரிய காளான் குடை இருந்தது. அப்போது மழை பெய்ய ஆரம்பித்து விட்டது. நத்தை மழைக்கு அந்த காளான் குடைக்கு கீழே வந்து ஒதுங்கியது.

அதன் உடல் காளான் குடை மேல் உரசியது. மேலும், நத்தையின் எச்சில் காளான் குடை மேல் பட்டு விட்டது. காளான் குடை, மெல்லத் தன் தொண்டையை செருமியபடி, நத்தையே நீ உன் ஓட்டுக்குள்ளேயே ஒதுங்கியிருக்கலாமே, எனக்கு இடைஞ்சலாக இங்கே ஏன் ? எனக் கேட்டது.

நத்தை அதற்கு ஆமாம் இருக்கலாம் தான் என்று பதில் சொல்லிகொண்டிருக்கும் போதே இன்னொரு நத்தை அந்தப் பக்கமாக வந்தது, மேலும் அது பேசிக்கொண்டிருக்கும் இந்த நத்தையைப் பார்த்து விட்டு அதுவும் காளான் குடைக்குக் கீழே வந்து ஒதுங்கிக் கொண்டது. அப்போது இரண்டு நத்தைகளுக்கும் அந்த இடம் போதவில்லை. இரண்டும் ஒன்றை ஒன்று தள்ளியபடியே இருக்க, அப்போராட்டத்தில் காளான் குடை உடைந்து, சரிந்து கீழே விழுந்து விட்டது.

அப்போது ஒரு நத்தை இன்னொரு நத்தையிடம் சொன்னது, ” நாம இனிமே . . . “

இந்தக் கதை பிரேம்-ரமேஷ் எழுதிய பரதேசி என்ற நாவலிலிருந்து.


பசி – 4

மே 13, 2007

பாரத்வாஜ முனிவரின் மகன் துரோணரின் மனைவிக்குத் தன் குழந்தையின் (அஸ்வத்தாமன் ?) பசியை அடைக்க வழி தெரியவில்லை. அப்பெண்மணி. அரிசி மாவை தண்ணீரில் கரைத்துப் பால் என்னும் தோற்றம் ஏற்படுத்தி குழந்தைக்குக் கொடுத்தாள்.

இக்கபடமான வாழ்க்கை துரோணருக்கு அதிர்ச்சியளித்தது. அவரிடம் பணம் சம்பாதிக்க எந்த திறமையும் அப்போது இல்லை. பிழைக்க வழி தெரியாமல் அவதிப்பட்ட அக்காலத்தில், பரசுராமர் (ரேணுகா மற்றும் ஜமதக்னி முனிவரின் மகன், திருமால் அவதாரம்) தானங்கள் செய்யும் நாள் என்று ஒரு நாள் உண்டு என்பது துரோணருக்குத் தெரியவந்தது.

அந்நாளில் துரோணர், பரசுராமரைத் தேடிச் சென்ற காலம், தானங்கள் எல்லாம் முடிந்து ஒன்றுமே இல்லாத காலம்.

பரசுராமர் அப்போது கொடுக்கத் தன்னிடம் பொருள் ஏதும் இல்லை என்று கைவிரித்து விட்டார்.

துரோணர் அதற்கு, ” சொர்க்க வாசலில் கதவு திறக்கும். உள்ளே போகலாம் என்று ஆயிரம் ஆண்டுகள் கண்விழித்தபடியே தவம் இருந்த ஒருவன், கடைசி நாள் அயர்ச்சியில் ஒரு விநாடி கண் மூடி திறந்த காலத்தில் கதவு திறந்து, பின் உடனே மூடிக்கொண்டால், அவனது மனநிலை எப்படி இருக்கும் ? அந்த மனநிலையில் நான் இப்போது இருக்கிறேன்.” என்றார்.

இந்த பதிலால் மனவெழுச்சி அடைந்த பரசுராமர், தன்னிடம் கொடுக்க தனது போர்த் திறமை மட்டுமே உண்டு எனவும், அதைத் துரோணருக்குத் தானமாகக் கற்பித்தார்.

அந்த தானத்தின் பயனால் துரோணர் அடைந்த பதவி தான் மகாபாரதத்தில் குரு பதவி.

அப்பதவியில், அவர் மரணம், அஸ்வத்தாமன் இறந்தான் என்ற கபடமான நிகழ்ச்சியால்.

தன் மகனின் பசி மற்றும் கபட வாழ்க்கை
இவற்றிலிருந்து வெளிவந்த துரோணரின் மரணம்
தன் மகனின் மரணம் என்ற ஒரு கபட நிகழ்ச்சியால்.


உன்னை விழுங்கும் பரவசநிலை

மே 13, 2007

என்ன தெரியும் அவளுக்கு ?
என நான் ஒதுங்கிய காலத்தில்
தருக்க நியாயத்தை பொய்யாக்கி
நீ சொன்ன ஒன்றை
நான் உனக்கு நினைவுகூறும்போது
பரவசநிலை உன்னை விழுங்கட்டும்.

நாம் வாழ்வில்
நெருங்காத காலத்தில்
முகமறியா ஞாநி போல
என் கண்ணீரைத் துடைத்தபடி
நீ சொன்ன ஒன்றை
நான் உனக்கு நினைவுகூறும்போது
பரவசநிலை உன்னை விழுங்கட்டும்.

அமைதியும் இரவும்
கலந்த குளிரில்
புரியாத முகபாவத்தில்
நீ சொன்ன ஒன்றை
நான் உனக்கு நினைவுகூறும்போது
பரவசநிலை உன்னை விழுங்கட்டும்

என் முகம்பார்த்து கரங்களைப் பற்றி
மழைச்சாரல்
என் முகத்தில் வீசியதுபோல
நீ சொன்ன ஒன்றை
நான் உனக்கு நினைவுகூறும் போது
பரவசநிலை உன்னை விழுங்கட்டும்

லேசான புகையும்,
அடர்ந்த நறுமணமும்
சூழ்ந்த இரவில்
நீ சொன்ன ஒன்றை
நான் உனக்கு நினைவுகூறும் போது
பரவசநிலை உன்னை விழுங்கட்டும்.

வாயோரத்தில் ஒட்டிய
புன்னைகையுடன்
உறக்க மயக்கத்தில்
நீ சொன்ன ஒன்றை
நான் உனக்கு நினைவுகூறும் போது
பரவசநிலை உன்னை விழுங்கட்டும்.


ரகசியம்

மே 13, 2007

காற்றின் மூச்சு எங்கள் மீது படர்ந்து பரவிய
ஏரியில் சூரியஸ்தமனம் கசிந்து பரவிய
வண்ணத்துப் பூச்சிகள் சிறகடித்துப் பறந்து பரவிய
இக்காலம் மறைவிடங்களின் உச்சகட்டம்

பனியின் அடர்த்தியில் நிழலுருவங்கள் மறைந்து பரவிய
சோம்பேறித் தவளைகள் தாவி குதிக்கும் நீரலைகள் பரவிய
மந்தமான இலையுதிகாலச் சிறகுகள் அலைந்து பரவிய
இக்காலம் மறைவிடங்களின் உச்சகட்டம்

திடீரெனெ எனைத் தேடும் பால்யகால நினைவுகள் பரவிய
என் இதயத்தில் பெருக்கெடுக்கும் கனவுகள் பரவிய
ஆணாக இருப்பதின் களைப்பு பரவிய
இக்காலம் மறைவிடங்களின் உச்சகட்டம்

அவள் தன் காயங்களை வெற்றியின் அடையாளங்களாக
என்னிடம் காட்டும் இக்காலம் இனிமையானது

இது வார்த்தைகளிலேயே சிறந்த மொழிபெயர்ப்பு


பசி – 3

மே 12, 2007

என்னுடன் படித்தவர்கள் நல்ல நிலைமையில் உள்ளனர். அவர்களையேப் பார்த்துப் பழகிய நான் சென்ற வாரம் ஒரு திருமணத்தில் காய் நறுக்கும் கோலத்தில் என் பள்ளி நண்பன் வாசுவைப் பார்த்து திகைத்தேன்.
முதலில் அவன் தானோ என்று சந்தேகம், பின்பு அவன் அடுத்தரிடம் பேசும் தோரணை அவனை எனக்கு அடையாளம் காட்டியது.

மிமிக்ரி செய்வதில் தேர்ந்தவன். அவன் பேசத் துவங்கினாலே எங்கள் நட்பு வட்டம் சிரிப்பில் மிதக்கும். அவன் குரல், உல்லாசம் நிறைந்த அந்தக் கால வாழ்க்கையை ஒரு கணம் என் நினைவில் மின்னலடித்தது.

எனது வழுக்கைத் தலை அவனுக்கு என்னை அடையாளம் காண சிரமம் இருந்தது. நானாகச் சென்று என்னை அறிமுகப்படுத்திய பின் அவன் முகத்தில் என்னை நினைவுக் கொண்டுவந்த மகிழ்ச்சி உடனே தெரிந்தது. ராமா, நீயாடா? என்று கத்திக் கையோடு என்னைக் கட்டியணைத்தான்.

பெருங்களத்தூர் ஸ்டாண்டர்ஸ் மோட்டார்ஸ் தொழிற்சாலையில் ஒரு தொழிலாளியாகப் பணிபுரிய வேண்டும் என்பது அவனின் அந்தக் காலக் கனவு மற்றும் இலட்சியம். இன்று அவனின் கனவும் நிஜம் இல்லை, அந்தத் தொழிற்சாலையும் இல்லை. பரஸ்பர விசாரிப்புக்குப் பின் அவனது இந்த வாழ்க்கைப் பற்றிப் பேச்சு திரும்பியது.

அவன் எல்லாவிதச் சமையலும் செய்வதில் தேர்ந்தவனாம். அவனுக்குத் தெரியாத சைவச் சமையல் வகை இன்றுவரை கிடையாதாம்.

அவன் சொன்னான், “ஒவ்வொரு மனிதனுக்கும் நினைவு எப்படி அவசியமோ, அப்படியே புனைவும் அவசியம்”. வாழ்க்கையில் உள்ள வினோதத்தையும், யதார்த்தமற்றப் போக்கையும் எதிர்கொள்ள இது மிகவும் அவசியம்”.

என்னால் விதவிதமான பல விலையுயர்ந்த உணவு வகைகளைச் சமைக்க முடியும். எனக்கும் அந்த உணவிற்கும் உள்ள இடைவெளி மிகவும் அதிகம். பல வித விலையுயர்ந்த உணவு என்னால் சமைக்கப்பட்டு பலருக்குப் பரிமாரப்படும்போது எனது ஆத்மா ஒரு நிறைவு அடைகிறது. நான் அந்தப் பசியையும், உணவையும் சேர்த்துக் கற்பனையில் அந்தக் கலப்பு நிகழ்ச்சியை என்னை வைத்து எண்ணி மனநிறைவடைகிறேன்.

எனது தின வாழ்க்கையில் நான் உண்ணும் உணவு வேறு வகை. பசி என்பதை அனுபவித்துப் பார்த்தவன் நான். அப்பசியை அடக்க நான் செய்த பரிசோதனை முயற்சிகள் பல. அதில் ஒன்று என்னால் மறக்க முடியாதது. “பசி என்பதை அடக்க வினோதமான சில பழக்க வழக்கங்கள் பசித்தவர்கள் இடையே உள்ளன. அதில் ஒன்று சிகரெட் அல்லது சுருட்டுச் சாம்லை நீரில் நனைத்து நக்கிச் சுவைப்பது. எனக்குச் சிகரெட் பிடிப்பதில் விருப்பமில்லாவிட்டாலும், அதன் சாம்பல் தரும் சுவைக்கு ஈடாக வேறு ருசியும், போதையும் வேறெவற்றிலுமில்லை.”

நான் செய்வது யாருக்கும் தீங்கில்லை.
ஆனால் என் செயலில் எனக்கு உறுத்தலில்லை.
இது நான் உருவாக்கிய வலி நீக்கும் மருந்து.

நான் எனக்குள் சொல்லிக் கொண்டேன்.

“நாய்கள் அமைதியாகப் பசியின்றி
வாழ்ந்து சாகும் உலகத்தில் தான்
இறைவன் இருப்பாராம்.”
என் நண்பன் போன்றவர் பசியின்றி
வாழ்ந்து சாகும் உலகத்தில்
யார் இருப்பார்கள் ?”

எனக்குத் திருமூலர் பாடல் நினைவுக்கு வருகிறது.

“அன்புள் உருகு அழுவான் அரற்றுவன்
என்பும் உருக இராப்பகல் ஏத்துவன்
என்பொன் மணியை இறைவனை யீசனைத்
தின்பன் கடிப்பன் திருத்துவன் தானே”


பசி – 2

மே 12, 2007

எனது எதிர் வீட்டுக் காம்பவுண்ட் சுவர் வழியாக ஒரு எச்சில் இலை கொஞ்சம் உணவுடன் சாலையில் வந்து விழும் ஒலி கேட்டு இன்று மூன்று ஜீவன்கள் திரும்பிப் பார்த்தன. அந்த மூன்று ஜீவன்களில் நானும் ஒருவன். மற்ற இரண்டு ஜீவன்கள் ஒரு ஆடும், நாயும்.

இரண்டும் ஆர்வத்துடன் இலையை நோக்கி ஓடி வந்தன. நாய் மிகுந்த தன்னம்பிக்கையுடனும், அதிகாரத்துடனும், அந்த இலையை நெருங்கி முகர்ந்து பார்த்து பின் நக்கிச் சாப்பிடத் துவங்கியது.

ஆட்டிற்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அது ஒரு முறை குரலெழுப்பித் தன் இருப்பைத் தெரிவித்தது, பதிலுக்கு நாய் கடுமையாக முகம் திருப்பிக் வள் என்று குலைத்தது.

ஆட்டினால் இலை வேண்டம் என்று நகர்ந்து போகவும் முடியவில்லை. அங்கேயே காத்திருக்கவும் முடியவில்லை. அந்த இலையை மீட்கவும் தெரியவில்லை.

நாய் ஆடு வந்து இலையை பறித்துவிடாமல் இருக்க சற்று அவசரத்துடன் இலையை இப்போது நக்கத் துவங்கியது.

ஆட்டிற்கு உணவு இலை. நாய்க்கு உணவு அந்த இலையில் உள்ள மிச்சம் மீதி மட்டுமே. அதால் இலையை உண்ண முடியாது.

இரண்டிற்கும் பொதுவான ஒரு அம்சம் பசி !


பசி – 1

மே 11, 2007

திடீரென்று என் மனதில் சில வாக்கியங்கள் உருவாயின. அவை அற்புதமானவையாக எனக்குப் பட்டது. இதற்கு முன் இவ்வளவு அற்புதமான வாக்கியங்கள் என்னால் சிந்திக்கப்பட்டு உருவானதில்லை என்ற உண்மையும் எனக்குப் புரிந்தது.

அந்த வாக்கியங்களை நான் திரும்ப ஒரு முறை சொல்லிப்பார்த்தேன்.
அப்போது வேறு சில வாக்கியங்களும் என் சொல்லுதலுடன்
தாமகவே வந்து சேர்ந்துவிடும் அழகு அல்லது கொடுமை நிகழ்ந்தது.

எனது கணிணியில் அவற்றைத் தட்டச்சு செய்யும் எண்ணத்தில் எழுத அமர்ந்தேன். வேகமான ஒரு ஆறு போல வார்த்தைக்குப் பின் வார்த்தை, அதன் தொடர்ச்சியாக வாக்கியம் என அவை வளர்ந்து மொத்தமாக ஒரு பொருளை உருவாக்கி விட்டன.

சக்தி என்பதின் பொருள் விளங்குவது போல இருந்தது.

இந்த எழுதுகிற வேகம் பல நிமிடங்கள் நீடிக்கிறது. சம்பவங்களும், பேச்சுக்களும் என் மூளையில் பொங்கி வழிந்தபடி உள்ளது. இந்த ஆனந்தத்தில் திளைப்பது எவ்வளவு சுகமானது ? இச்சுகத்தை எதனுடன் ஒப்பிட முடியும் ? நான் அந்த ஆனந்ததிற்குக் கட்டுப்படுவது சில நிமிடங்களே. இவையே நினைத்தபொதெல்லாம் என்னால் அனுபவிக்க முடியும் என்று என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.

சிந்தனையின் வேகத்தில் எழுதிச் சமாளிக்க முடியாமல் பல விஷயங்களை நான் விட்டுவிடுவது என் மனத்துயரை அதிகரித்துவிடுகிறது. என்னால் முடிந்த அளவு வேகமாகவும், நினைவுக் கூட்டியும் எழுதுகிறேன். அப்படியும் விடுபட்ட விஷயங்கள் பல என்னை ஏக்கமுறச் செய்கிறது.

நான் எழுதியதிலும், வாசித்ததிலும் கூட இது தான் சிறந்தது என்று ஏனோ ஒரு எண்ணம் எனக்குக் தோன்றுகிறது.


பீடிகை 1

மே 8, 2007

பசி அதிகமாயுள்ளது.


தருணம்

மே 3, 2007

அவளின் கனவு
ஒரு வியாபாரச் சந்திப்பு
என்னுடன்
விலங்குப் பண்ணையில்

பண்ணையில்
ஒரு நாள் மதியம்
அது நிகழ்ந்தது
அவளின் முழு நினைவுச் சக்தியில்

சக்தி என்பது
நினைவில் மட்டுமல்ல
தோற்றத்திலும்
என்பது
என்னால் அங்கு நிறுவப்பட்டது

நிறுவப்பட்ட விவாதம்
ஒளிர்ந்தது
இருவரின் நிராசையில்

நிராசையின் வேகத்தில்
நான் சந்தித்தது
அவளின் புன்னகை

புன்னகை என்பது காதலின்
அடையாளம் அதுவும்
அவளருந்தும் தண்ணீரில்
நான் கண்ட பிரதிபலிப்பு.


Hello world!

மே 3, 2007

Welcome to ஈ – வேகம். This is my first post. Please leave your comments if my blog brovoked anything inside you!